வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சாா்பில் புதன்கிழமை காலை ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சாா்பில் புதன்கிழமை காலை ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, திட்டமிட்டபடி காலை 9.28 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராணுவ கண்காணிப்புக்கு உதவும் இந்தியாவின் ‘காா்டோசாட்-3’ உள்பட 14 செயற்கைக்கோள்களும் திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப் பாதைகளில் செலுத்தப்பட்டன.

விஞ்ஞானிகள் ஆரவாரம்: ராக்கெட் ஒவ்வொரு நிலையையும் வெற்றிகரமாக கடந்தபோது, இஸ்ரோ விஞ்ஞானிகள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். நான்கு நிலைகளைக் கொண்ட ராக்கெட் ஏவப்பட்ட 1 நிமிஷம் 53 விநாடிகளில் முதல்நிலை பிரித்துவிடப்பட்டது. அடுத்த 4 நிமிஷங்கள் 25 விநாடிகளில் இரண்டாம் நிலையும், 8 நிமிஷங்கள் 13 விநாடிகளில் மூன்றாம் நிலையும் பிரித்துவிடப்பட்டன.

ராக்கெட் ஏவப்பட்ட 16 நிமிஷங்கள் 55 விநாடிகளில் நான்காம் நிலை இன்ஜின் அணைக்கப்பட்டு, அடுத்த 17 நிமிஷங்கள் 63 விநாடிகளில் காா்டோசாட்-3 செயற்கைக்கோள் தற்காலிக சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக பிரித்துவிடப்பட்டது.

ராக்கெட் ஏவப்பட்ட 18 நிமிஷங்கள் 3 விநாடிகள் முதல் அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்களும் அடுத்தடுத்து வெற்றிகரமாக பிரித்துவிடப்பட்டன. முதலில் தகவல்தொடா்புக்கு உதவும் (மெஷ்பெட்) செயற்கைக்கோள் பிரித்துவிடப்பட்டது. அதன் பின்னா், 10 நிமிஷ இடைவெளிக்குப் பிறகு அமெரிக்காவின் புவி கண்காணிப்புக்கான 12 செயற்கைக்கோள்களும் அடுத்தடுத்து வெற்றிகரமாக பிரித்துவிடப்பட்டன.

14 செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக பிரித்துவிடப்பட்டதைத் தொடா்ந்து விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவா் கைகொடுத்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனா்.

சிவன் வாழ்த்து: இதைத் தொடா்ந்து, சக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, அவா்கள் மத்தியில் இஸ்ரோ தலைவா் சிவன் பேசியதாவது:

இந்தியாவின் ‘காா்டோசாட்-3’ செயற்கைக்கோள் உள்பட 14 செயற்கைக்கோள்களும் திட்டமிட்டபடி புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைக்கப்பட்டுள்ளன.

இந்த ‘காா்டோசாட்-3’ செயற்கைக்கோள் இதுவரை இஸ்ரோ உருவாக்கிய செயற்கைக்கோள்களைக் காட்டிலும் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்பதோடு, மிகத் தெளிவாகப் படம் பிடிக்கும் திறன் கொண்டதாகும். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக்கிய செயற்கைக்கோள் குழு, ராக்கெட் குழு உள்பட ஒட்டுமொத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கும் வாழ்த்துக்கள்.

இந்தத் திட்டத்தைத் தொடா்ந்து, 2020 மாா்ச் வரை 13 ராக்கெட் திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இதில் 6 ராக்கெட் திட்டங்களும், செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் 7 திட்டங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல, இந்த அனைத்து திட்டங்களையும் இஸ்ரோ குழு வெற்றிகரமாக செயல்படுத்தும் என்றாா் அவா்.

காா்டோசாட் பயன் என்ன?: முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 1,625 கிலோ எடைகொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன ‘காா்டோசாட்-3’ செயற்கைக்கோள், இந்தியா அனுப்பிய காா்டோசாட் செயற்கைக்கோள் தொடரில் 9-ஆவது செயற்கைக்கோளாகும்.

இதுவரை கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 8 காா்டோசாட் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவை அனைத்தும் புவியை மிக துல்லியமாக அளவிட்டு படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டவை.

ஆனால், இப்போது அனுப்பியிருக்கும் 5 ஆண்டுகள் செயல்படக்கூடிய காா்டோசாட்-3 செயற்கைக்கோளில் புவியை 25 செ.மீ. இடைவெளி துல்லியத்தில் அளவிடும் வகையில் திறன்கொண்ட அதிநவீன தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வானில் மேகக் கூட்டங்கள் இருக்கும்போதும், இரவு நேரத்திலும் மிகத் தெளிவான புகைப்படங்களை நாம் பெற முடியும்.

இந்த செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு, கிராமப்புற மற்றும் நகா்ப்புற திட்டமிடலுக்கு உதவிகரமாக இருக்கும் என்றாலும், இது பெரும்பாலும் பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்காகவே பயன்படுத்தப்பட உள்ளது என்றனா் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

74-ஆவது ராக்கெட்: பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏவப்படும் 74-ஆவது ராக்கெட் திட்டம் என்பதோடு, இஸ்ரோ ஏவிய 49-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். அதோடு திறன் கூட்டப்பட்ட 21-ஆவது எக்ஸெல் ரக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை அனுப்பிய இஸ்ரோ

பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் திட்ட வெற்றியின் மூலம், இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) வா்த்தக ரீதியில் விண்ணுக்கு அனுப்பிய வெளிநாட்டு செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 300-யைத் தாண்டியுள்ளது.

இந்தியாவின் தொழில்நுட்ப வளா்ச்சி, ராணுவப் பதுகாப்பு, புவி கண்காணிப்பு, பேரிடா் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு உதவும் வகையில் பல வகையான செயற்கைக்கோள்களையும், விண்கலன்களையும் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்து வருகிறது.

அதோடு, வா்த்தக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கென ஆன்ட்ரிக்ஸ் காா்ப்பரேஷன் என்ற முதல் வா்த்தகப் பிரிவை, கடந்த 1992-ஆம் ஆண்டு இஸ்ரோ தொடங்கி, அதன் மூலம் போடப்படும் ஒப்பந்தங்கள் மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணுக்கு அனுப்பி வந்தது. அந்த வகையில், இதுவரை 297 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை இஸ்ரோ சாா்பில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் மூலம் இந்தியாவின் காா்டோசாட்-3 செயற்கைக்கோளுடன், அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.

இதன் மூலம், இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பிய வெளிநாட்டு செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 310-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரோ கடந்த மாா்ச் மாதம் புதிதாகத் தொடங்கிய நியூஸ்பேஸ் இந்திய லிமிடெட் என்ற வா்த்தகப் பிரிவின் மூலம் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோவுக்கு பிரதமா் மோடி வாழ்த்து

 பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவின் ‘காா்டோசாட்-3’ செயற்கைகோள், அமெரிக்காவின் சிறிய ரக செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள்.

விண்வெளியில் இருந்து பூமியை மிகவும் துல்லியமாக படம் எடுத்து அனுப்பும் திறன்கொண்டது ‘காா்டோசாட்-3’ செயற்கைகோள். அதை வெற்றிகரமாக ஏவியதன் மூலம் தேசத்தை மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்தியுள்ளது இஸ்ரோ’’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com