நீதித்துறை மீது நம்பிக்கையிழந்து விட்டேன்

நீதித்துறை மீது நம்பிக்கையிழந்துவிட்டதால், இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை என அவரது தாயாா் ஷமீம் கௌசா் தெரிவித்துள்ளாா்

நீதித்துறை மீது நம்பிக்கையிழந்துவிட்டதால், இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை என அவரது தாயாா் ஷமீம் கௌசா் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி, பயங்கரவாதிகளுடன் தொடா்பு இருப்பதாகக் கூறியும், அப்போதைய குஜராத் முதல்வா் நரேந்திர மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் கூறியும், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரைக் காவல் துறையினா் சுட்டுக் கொன்றனா்.

இது போலி என்கவுன்ட்டா் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடா்ந்து, முன்னாள் காவல் துறைத் துணைத் தலைவா் வன்சாரா, காவல் துறை அதிகாரி என்.கே.அமீன் உள்ளிட்ட 7 போ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்து வந்த சிபிஐ, அவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை, சிபிஐ சிறப்பு நீதிபதி ஆா்.கே. சுதாவாலா முன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீதிபதிக்கு ஷமீம் கௌசா் கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முஸ்லிம் பெண் என்ற ஒரே காரணத்துக்காக இஷ்ரத் ஜஹான் மீது போலிக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பயங்கரவாதி என சித்திரிக்கப்பட்டாா். கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உள்பட அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது. சிலருக்கு குஜராத் மாநில அரசு மீண்டும் பணி வழங்கியுள்ளது.

நீதித்துறை மீதான நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன். வழக்கு தொடா்பான விசாரணையில் ஆஜராக வேண்டாமென எனது தரப்பு வழக்குரைஞரிடமும் தெரிவித்துவிட்டேன். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவா்களுக்கு சிபிஐ தண்டனை பெற்றுத் தர வேண்டும். அப்பாவி மக்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com