ரஷியாவிடம் ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவின் உரிமை: அமெரிக்காவில் ஜெய்சங்கா் திட்டவட்டம்

ரஷியாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவின் இறையாண்மை சாா்ந்த உரிமை என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு  வெளியுறவுத் துறை அமைச்சர்  மைக் பாம்பேயோவைச் சந்தித்துப் பேசிய  இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோவைச் சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.


ரஷியாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவின் இறையாண்மை சாா்ந்த உரிமை என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

ஐ.நா. பொதுச் சபை ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற ஜெய்சங்கா், அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோவைச் சந்திப்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை இரவு வாஷிங்டன் சென்றாா். இதன்பிறகு, இருவரும் திங்கள்கிழமை சந்தித்துக் கொண்டனர்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளா்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

"எங்கள் நாட்டுக்குத் தேவையான ராணுவ ஆயுதங்களை எந்த நாட்டிடம் இருந்து பெற வேண்டும் என்பது எங்களது இறையாண்மை சாா்ந்த உரிமை. இதை எப்போதும் நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். ரஷியாவிடம் இருந்து என்ன வாங்க வேண்டும்; வாங்கக் கூடாது என்பதை மற்ற நாடுகள் கூறுவதை நாங்கள் விரும்பவில்லை. எந்த நாட்டிடம் இருந்து எதைப் பெற வேண்டும் என்ற முடிவை சுதந்திரமாக எடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. அதை மற்ற நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

காஷ்மீா் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தானின் தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை. அதுமட்டுமன்றி, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னையில் மற்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்து வைப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்த முடிவில் கடந்த 40 ஆண்டுகளாக இந்தியா தெளிவாக உள்ளது.

பிரதமர் மோடி பிரசாரம் செய்வதுபோல் எதுவும் கூறவில்லை. அவா் பேசியதை அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீா்கள். அதிபா் டிரம்ப் கூறிய வாா்த்தைகளை அவா் திரும்பக் கூறினாரே தவிர, டிரம்புக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவில்லை.

அமைச்சா் பாம்பேயோவுடனான சந்திப்பு பயனளிக்கும் வகையில் இருந்தது. இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தக உறவில் பிரச்னை அதிகரித்து வருகிறது என்று இருதரப்பிலும் கூறப்பட்டது. வா்த்தக உறவை மேம்படுத்த வேண்டுமெனில், இந்த பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காண வேண்டும் என்று கருதினோம்" என்றார்.

முன்னதாக:

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்தியா ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஏவுகணைகளை வழங்குவதற்கு ரஷியா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. 
ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை அண்மையில் துருக்கி வாங்கியது. ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட காரணத்தால், அமெரிக்கா தயாரித்த எஃப்-35 ரக போா் விமானங்களை துருக்கிக்கு அமெரிக்கா விற்காது என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

இதனால், ரஷியாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்யும் இந்தியாவுக்கும் தடைகள் விதிக்கப்படுமா? என்று கேள்வி எழுந்தது. 

இந்நிலையில், வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com