தசராவின்போது பிரான்ஸ் செல்லும் ராஜ்நாத் சிங்: காரணம் இதுதான்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக அக்டோபர் 8-ஆம் தேதி பிரான்ஸ் செல்கிறார். 
ராஜ்நாத் சிங் | கோப்புப்படம்
ராஜ்நாத் சிங் | கோப்புப்படம்


மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக அக்டோபர் 8-ஆம் தேதி பிரான்ஸ் செல்கிறார். 

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முந்தைய மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த விமானங்கள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வரும் 8-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பிரான்ஸ் நாட்டின் ராணுவ உயரதிகாரிகள், ரஃபேல் போர் விமானங்களைத் தயாரித்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்த பயணத்தின்போது ராஜ்நாத் சிங் ரஃபேல் போர் விமானத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்த விமானங்கள் அதிகாரப்பூர்வமாக இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டாலும், இந்தியாவுக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சில சாதனங்கள் பொருத்தப்பட்டு, விமானிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது. இதனால், மே 2020-இல்தான் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு வரவுள்ளது.      

இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்காக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் செல்கிறார். அக்டோபர் 8-ஆம் தேதி ரஃபேல் போர் விமானங்கள் அதிகாரப்பூர்வமாக இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டவுடன், ராஜ்நாத் சிங் 9-ஆம் தேதி பாரிஸ் செல்கிறார். அங்கு பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையிலான ராணுவ உறவு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். 

இந்த பயணத்தின்போது, இந்திய விமானப் படை துணைத் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட ஹெச்எஸ் அரோராவும் ராஜ்நாத் சிங்குடன் பயணிக்கிறார். முன்னதாக, இந்திய விமானப் படைத் தலைவரும் ராஜ்நாத் சிங்குடன் பிரான்ஸ் செல்லவுள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அக்டோபர் 8-ஆம் தேதி விமானப் படை தினம் என்பதால், தில்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது. இதனால், இந்த பயணத்தில் அவர் இடம்பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com