வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறையும்

குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட நிதி கொள்கையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 
வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறையும்


குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட நிதி கொள்கையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 
பொருளாதார வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டதன் எதிரொலியாக, வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.  கடந்த சுமார் பத்தாண்டு அளவில் தொடர்ச்சியாக 5 முறை ரெப்போ  வட்டி விகிதங்களை குறைத்தது ரிசர்வ் வங்கி வரலாற்றில் இதுவே முதல் முறை.  
ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடும் நிதிக் கொள்கை குறித்த அறிவிப்பை அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். ஆறு உறுப்பினர்கள் அடங்கிய நிதி கொள்கை குழுவில் (எம்பிசி) உள்ள அனைவருமே வட்டி குறைப்புக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து ரிசர்வ் வங்கி, குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான (ரெப்போ) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 5.15 சதவீதமாக நிர்ணயித்தது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கு முன்பு,  கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் ரெப்போ வட்டி விகிதமானது மிகவும் குறைந்தபட்ச அளவாக 5 சதவீதம் என்ற அளவில் இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.
ரெப்போ வட்டி விகித குறைப்பைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி, பிற வணிக வங்கிகளிடமிருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதமும் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 4.9 சதவீதமாக குறைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு குறைப்பு: நாட்டின் பொருளாதார வளர்ச்சி  நடப்பு நிதியாண்டில் 6.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதிக் கொள்கையில் அது 6.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகவும் குறைவாக 5 சதவீதமானது. இந்த நிலையில், அடுத்து வரும் காலாண்டிலும் கணிசமான முன்னேற்றம் தென்படாததையடுத்து ரிசர்வ் வங்கி பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை 0.80 சதவீதம் குறைத்துக் கொண்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து, முந்தைய நான்கு நிதிக் கொள்கை அறிவிப்புகளில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1.1 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், வங்கிகள் அதன் பயனை வாடிக்கையாளர்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்கவில்லை என ரிசர்வ் வங்கி குற்றம் சாட்டியுள்ளது. எனவே, வட்டிக் குறைப்பின் பலன்களை கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
பெரு நிறுவனங்களுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரி சலுகை வழங்கியது உள்பட வளர்ச்சியை ஊக்குவிக்க கடந்த ஆறு வாரங்களாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே ரிசர்வ் வங்கி தற்போது கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.
அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் மோசமடைந்துள்ள உலகளாவிய மந்த நிலையை சமாளிக்க  சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் நிதிக் கொள்கையை தளர்த்தி வருகின்றன.

நுகர்வு நடவடிக்கை சூடுபிடிக்கும்
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களைக் குறைத்ததைத் தொடர்ந்து வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் வங்கிகள் கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏனெனில், வங்கிகள் தனது வட்டி விகிதங்களை ரெப்போ அளவுகோலுடன் நேரடியாக இணைத்துள்ளன.  
பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளதையடுத்து, வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், கடன் செலவினம் குறைந்து பொதுமக்களின் நுகர்வு நடவடிக்கை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கித் துறை ஸ்திரமான நிலையில் உள்ளது: சக்திகாந்த தாஸ்
இந்திய வங்கித் துறை ஸ்திரமான நிலையில் உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
வங்கி மற்றும் நிதி சேவைத் துறை குறித்து பொதுமக்களிடையே எழுந்துள்ள அச்சம் தேவையற்றது. இந்திய வங்கித் துறை சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதுடன் ஸ்திரத்தன்மையுடனும் உள்ளது. இதில், கூட்டுறவு வங்கிகளும் அடக்கம். எனவே, பொதுமக்கள் எவரும் இதுகுறித்து பீதியடைய வேண்டாம்.
பஞ்சாப்  & மகாராஷ்டிரம் கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து,  ரிசர்வ் வங்கி தற்போது, கூட்டுறவு வங்கிகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை மறுஆய்வு செய்து வருகிறது. மேலும், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுடனும் கலந்தாலோசிக்கப்படும்.

நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும்: மறைமுக வரி வருவாய் வசூலில் ஏற்பட்ட சரிவு, மத்திய அரசு ரூ.1.45 லட்சம் கோடிக்கு பெரு நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்கியது ஆகியவற்றுக்கு பின்னரும் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் வைத்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இடைக்கால ஈவுத்தொகை கோரிக்கை வரவில்லை: வருவாயில் ஏற்பட்ட சரிவை ஈடு செய்ய ரிசர்வ் வங்கியிடமிருந்து, மத்திய அரசு ரூ.30,000 கோடியை இடைக்கால ஈவுத்தொகையாக கோரவுள்ளதாக ஊடகங்களில் மட்டுமே செய்திகள் வெளியாகின. ஆனால், மத்திய அரசிடமிருந்து அதுபோன்ற கோரிக்கைகள் எதுவும் ரிசர்வ் வங்கியிடம் வைக்கப்படவில்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com