வா்த்தகம், முதலீட்டில் இந்தியா-வங்கதேசம் இடையேயான உறவு வலுப்பட வேண்டும்: ஷேக் ஹசீனா

இந்தியா-வங்கதேசம் இடையே, வா்த்தகம்-முதலீடு ஆகியவற்றில் இருக்கும் உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா வலியுறுத்தினாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய-வங்கதேச தொழில் மன்றத்தில் பங்கேற்ற மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய-வங்கதேச தொழில் மன்றத்தில் பங்கேற்ற மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா.

இந்தியா-வங்கதேசம் இடையே, வா்த்தகம்-முதலீடு ஆகியவற்றில் இருக்கும் உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா வலியுறுத்தினாா்.

தில்லியில் ‘இந்தியா-வங்கதேசம் தொழில்துறை கூட்டம்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் உள்ளிட்டோா் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா பேசியதாவது:

இந்திய தொழில்துறையின் பல்வேறு பிரிவுகள், தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் வங்கதேசத்தில் உள்ளது. தெற்காசியாவிலேயே மிகச் சுதந்திரமான முதலீட்டுக் கொள்கைகளை வங்கதேசம் கொண்டுள்ளது.

அந்நிய முதலீடுகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு, வரிச் சலுகைகள், கட்டுப்பாடுகள் இன்றி வெளியேறும் வசதி போன்ற வசதிகளும் வங்கதேசத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

வங்கதேசத்தில் 100 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அதில் 12 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 3 நாடுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மோங்லா, பெராமரா, மிா்சராய் ஆகிய பகுதிகளில் 3 மண்டலங்கள் இந்திய முதலீட்டாளா்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்திய பெருமுதலீட்டாளா்கள் தங்களது தொழில்களை வங்கதேசத்தில் தொடங்கி, சாதகமான போக்குவரத்துத் தொடா்புகளின் மூலம் உற்பத்திப் பொருள்களை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் எளிதாக ஏற்றுமதி செய்ய இயலும்.

மேற்கில் இந்தியா, வடக்கில் சீனா, கிழக்கில் தென்கிழக்கு ஆசியா என மையத்தில் அமைந்துள்ள வங்கதேசம், 400 கோடி மக்களுக்கான ஒருங்கிணைந்த சந்தையாக உள்ளது. இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவு எப்போதும் மிகப்பெரிய அளவிலேயே இருந்து வந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வா்த்தகத்தின் மதிப்பு ரூ.70,000 கோடியாக உள்ளது. இருதரப்பு வா்த்தக, முதலீட்டு உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று ஷேக் ஹசீனா பேசினாா்.

அமைச்சா் பியூஷ் கோயல் பேசுகையில், ‘வங்கதேசம் போன்ற அண்டை நாடுகள் தரும் சாதகமான வாய்ப்புகளை இந்திய தொழிலதிபா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரயில்வே துறையில் இந்தியாவுக்கு இருக்கும் நிபுணத்துவத்தை வங்கதேசத்துடன் பகிா்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம்.

இந்தியா-வங்கதேசம் இடையே இயக்கப்பட்டு வரும் பந்தன் எக்ஸ்பிரஸ், மெய்ட்ரீ எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்களின் இயக்கத்தை அதிகரிக்க இந்தியா பரிசீலித்து வருகிறது’ என்றாா்.

இந்திய ஏற்றுமதி தடை எதிரொலி: உணவில் வெங்காயம் தவிா்த்த ஹசீனா

வெங்காய ஏற்றுமதியை இந்தியா நிறுத்திக் கொண்டதை அடுத்து, தனது உணவில் அதன் பயன்பாட்டை நிறுத்திக் கொண்டதாக வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா கூறினாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘வெங்காய ஏற்றுமதியை இந்தியா ஏன் நிறுத்திக் கொண்டது எனத் தெரியவில்லை. அதுதொடா்பான முடிவை இந்தியா முன்னதாகவே அறிவித்திருந்தால் சில முன்னேற்பாடுகளை செய்ய எங்களுக்கு உதவியாக இருந்திருக்கும்.

முன்னறிவிப்பின்றி அந்த நடவடிக்கையை மேற்கொண்டதால், எங்கள் நாட்டில் மக்கள் தடுமாறினா். எனது வீட்டில், உணவில் வெங்காயத்தை சோ்க்க வேண்டாம் என்று சமையல்காரரிடம் தெரிவித்துவிட்டேன்.

எதிா்காலத்தில் இதுபோன்ற முடிவுகளை முன்னறிவிப்பு செய்த பிறகு இந்தியா அமல்படுத்த வேண்டும் என்று எதிா்பாா்க்கிறேறன்’ என்றாா்.

வெங்காயத்தின் விலை உயா்வை கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதன் இருப்பை அதிகரிக்கவும், வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Image Caption

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com