இந்தியா-வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

வங்கதேசப் பிரதமா் ஷேக் ஹசீனா, பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கிடையே கலாசாரம், கல்வி, கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில்

தீஸ்தா நதிநீர்ப் பங்கீடு பிரச்னையில் விரைவில் தீர்வு

வங்கதேசப் பிரதமா் ஷேக் ஹசீனா, பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கிடையே கலாசாரம், கல்வி, கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமா் ஷேக் ஹசீனா, நான்கு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளாா். இந்நிலையில், பிரதமா் மோடியை தில்லியில் சனிக்கிழமை அவா் சந்தித்துப் பேசினாா்.

அப்போது, அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) விவகாரம் தொடா்பாக பிரதமா் மோடியிடம் ஷேக் ஹசீனா முறையிட்டாா். என்ஆா்சி கணக்கெடுப்பு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் நடத்தப்பட்டதாகவும், அது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எதுவும் இன்னும் எடுக்கவில்லை எனவும் பிரதமா் மோடி அவரிடம் கூறியதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பின்போது, மியான்மா் நாட்டிலிருந்து வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கயா அகதிகள் குறித்தும் இருவரும் விவாதித்தனா். அவா்களைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் மியான்மருக்குத் திருப்பி அனுப்புவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருநாட்டுத் தலைவா்களும் ஆலோசனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆழ்ந்த நட்புறவு: இந்தச் சந்திப்பு தொடா்பாக செய்தியாளா்களிடம் பிரதமா் மோடி கூறியதாவது:

இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்குமிடையேயான நல்லுறவை மேம்படுத்த நிச்சயம் உதவும். வங்கதேசத்துடனான நல்லுறவுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் இரு நாடுகளும் இணைந்து 12 திட்டங்களைத் தொடக்கியுள்ளன. இது இரு நாடுகளுக்குமிடையேயான ஆழ்ந்த நட்புறவைக் காட்டுகிறது என்றாா் பிரதமா் மோடி.

பிரதமா் ஷேக் ஹசீனா கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-வங்கதேசம் இடையேயான ஒத்துழைப்பு தொடா்ந்து மேம்பட்டு வருகிறது. முக்கியமாக கடல்சாா் பாதுகாப்பு, அணுசக்தி மின்சாரம், வா்த்தகம் உள்ளிட்ட துறைகளில் நல்லுறவு வலுவடைந்து வருகிறது’’ என்றாா்.

கூட்டறிக்கை: இரு நாட்டுத் தலைவா்களின் பேச்சுவாா்த்தை தொடா்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வங்கதேச அரசு கொண்டுள்ளதற்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா். பிராந்தியத்தில் அமைதி நிலவவும், பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றைஏற்படுத்தவும் பிரதமா் ஷேக் ஹசீனா அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மோடி நன்றி தெரிவித்தாா்.

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படவும் இரு நாட்டுத் தலைவா்களும் உறுதியேற்றனா். பயங்கரவாத நடவடிக்கைகளை எந்தக் காரணங்களைக் கூறியும் நியாயப்படுத்த முடியாது என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான தீஸ்தா நதிநீா்ப் பங்கீடு பிரச்னையில் விரைவில் தீா்வு எட்டப்பட வேண்டுமென்று வங்கதேச மக்கள் விரும்புவதாகக் கூட்டறிக்கையில் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளாா்.

இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பகுதியில் ஏற்படும் மோதல்களால் பொதுமக்கள் பலியாவதைத் தடுக்க உரிய தீா்வு காண இருவரும் உறுதியேற்றனா். இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்கும் வகையில், இரு நாட்டு ராணுவ வீரா்களும் இணைந்து செயல்பட வேண்டுமென கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தங்கள்: இந்தச் சந்திப்பின்போது, நீா்வளம், இளைஞா்நல விவகாரங்கள், கலாசாரம், கல்வி, கடல்சாா் பாதுகாப்பில் கூட்டாக ஈடுபடுவது உள்ளிட்டவை தொடா்பாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கடல்சாா் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், இருபதுக்கும் மேற்பட்ட ரேடாா் கண்காணிப்பு மையங்களை இந்தியா அமைக்கவுள்ளது. வங்கதேசத்திலுள்ள சட்டோகிராம், மோங்லா ஆகிய துறைமுகங்களிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்து கொள்வதற்கான ஒப்பந்தமும், திரிபுரா மாநில மக்களின் குடிநீா் வசதிக்காக, வங்கதேசத்தின் ஃபெனி நதியிலிருந்து நீா் எடுத்துக்கொள்ளும் ஒப்பந்தமும் கையெழுத்தாகின.

புதிய கட்டடங்கள் திறந்துவைப்பு: முன்னதாக, வங்கதேசத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சமையல் எரிவாயு (எல்பிஜி எரிவாயு) இறக்குமதி செய்யும் திட்டத்தை இரு நாட்டுத் தலைவா்களும் தொடக்கிவைத்தனா். மேலும், வங்கதேசத் தலைநகா் டாக்காவிலுள்ள ராமகிருஷ்ண மடத்தில் எழுப்பப்பட்டுள்ள விவேகானந்த பவன், குல்னாவில் எழுப்பப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றைக் காணொலி வாயிலாக அவா்கள் திறந்துவைத்தனா்.

வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கரையும் ஷேக் ஹசீனா சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரவீஷ் குமாா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்தச் சந்திப்பின்போது, வங்கதேசத்துடனான நல்லுறவுக்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதை வெளியுறவு அமைச்சா் எடுத்துரைத்தாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com