ஜம்மு எல்லையில் 8,600 பதுங்கு குழிகள் அமைப்பு

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் 8,600 சமூக மற்றும் தனிநபர் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளதாக

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் 8,600 சமூக மற்றும் தனிநபர் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
 ஜம்மு வட்டார ஆணையர் சஞ்சீவ் வர்மா தலைமையில் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள சம்பா, கதுவா, ஜம்மு, பூஞ்ச், ரஜௌரி ஆகிய மாவட்டங்களில் பதுங்கு குழிகளை அமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அளிக்கப்பட்ட விவரம் தொடர்பாக அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
 ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் 8,600 சமூக மற்றும் தனிநபர் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் 4,431 பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ரஜௌரியில் 1,238 பதுங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளன. சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி 1,063 பதுங்கு குழிகளும், கதுவாவில் 1,039 மற்றும் ஜம்முவில் 869 பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
 ஜம்மு பிராந்தியத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியையொட்டி, பாகிஸ்தானின் குண்டுவீச்சுக்கு ஆளாக வாய்ப்புள்ள இடங்களில் 14,460 பதுங்கு குழிகளை அமைக்க மத்திய அரசை கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் அனுமதி அளித்தது. இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.415.73 கோடியை அரசு ஒதுக்கியது.
 அவற்றில் இரட்டை மாவட்டங்களான ரஜௌரி மற்றும் பூஞ்ச்சில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய இடங்களில் 7,298 பதுங்கு குழிகளுக்கும், ஜம்மு, சம்பா, கதுவா மாவட்டங்களில் சர்வதேச எல்லையையொட்டிய பகுதிகளில் 7,162 பதுங்கு குழிகளும் அமைக்க அரசு முடிவு செய்திருந்தது.
 இதுவரை 8,600 பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள பதுங்கு குழிகளை அமைக்கும் பணியை விரைவுபடுத்துமாறு ஜம்மு வட்டார ஆணையர், துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டார். இப்பணியை அவ்வப்போது கண்காணிக்குமாறும் அவர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com