பஞ்சாப்-மகாராஷ்டிர வங்கி முன்னாள் தலைவர் கைது

மகாராஷ்டிரத்தில் உள்ள பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் (பிஎம்சி) நடைபெற்ற மோசடி தொடர்பாக அந்த வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரத்தில் உள்ள பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் (பிஎம்சி) நடைபெற்ற மோசடி தொடர்பாக அந்த வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 137 கிளைகளுடன் "பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி' இயங்கி வருகிறது. இந்த வங்கியின் பணப்பரிவர்த்தனைகளில் முறைகேடு நடைபெற்றிருப்பது, ரிசர்வ் வங்கி ஆய்வின்போது தெரிய வந்தது.
 இதையடுத்து, வங்கியின் செயல்பாடுகளுக்கு கடந்த வாரம் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
 இந்த முறைகேடு தொடர்பாக, மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங், முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள், வீட்டுவசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ராகேஷ் வதாவன், அவரது மகன் சாரங் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ரூ. 4,355 கோடி அளவுக்கு வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
 முன்னதாக, முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர், மும்பையில் உள்ள கூடுதல் பெருநகர நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஜி. சேக் முன் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
 அப்போது, ஜாய் தாமûஸ வரும் 17-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
 ராகேஷ் வதாவன், சாரங் ஆகியோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் வரும் 9-ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 மும்பை போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிரத்தில் மும்பை உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com