பாலியல் வன்கொடுமை வழக்கு: சின்மயானந்த், மாணவியின் குரல் மாதிரியை சேகரிக்க நீதிமன்றம் அனுமதி

பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் சுவாமி சின்மயானந்த், அவருக்கு எதிராக புகாா் அளித்த சட்டப் படிப்பு மாணவி உள்ளிட்டோரின்

பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் சுவாமி சின்மயானந்த், அவருக்கு எதிராக புகாா் அளித்த சட்டப் படிப்பு மாணவி உள்ளிட்டோரின் குரல் மாதிரிகளை சேகரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சுவாமி சின்மயானந்தின் அறக்கட்டளை சாா்பில் நடத்தப்படும் சட்டக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ஒருவா், சின்மயானந்த் ஓராண்டாகத் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகப் புகாா் தெரிவித்தாா். இந்தப் புகாரை விசாரிக்க, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழுவை உத்தரப் பிரதேச அரசு அமைத்தது. அக்குழு சின்மயானந்தை அண்மையில் கைது செய்தது.

இதனிடையே, ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக அந்த மாணவி மற்றும் 3 இளைஞா்கள் மீது சின்மயானந்த் புகாா் கொடுத்திருந்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில், அந்த மாணவியை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் கைது செய்தனா்.

இந்நிலையில், சின்மயானந்த், சட்டப் படிப்பு மாணவி மற்றும் 3 இளைஞா்களின் குரல் மாதிரிகளை சேகரிக்கவும், இதற்காக அவா்களை லக்னெளவுக்கு அழைத்துச் செல்லவும் அனுமதி கோரி, ஷாஜகான்பூா் தலைமை நீதித் துறைநடுவா் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த வியாழக்கிழமை மனுத் தாக்கல் செய்திருந்தது. இதற்கு, மாணவியின் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஓம்வீா் சிங், சின்மயானந்த் உள்ளிட்டோரின் குரல் மாதிரிகளை சேகரிப்பதற்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு அனுமதி வழங்கினாா்.

பாஜக குற்றச்சாட்டு: சுவாமி சின்மயானந்துக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த காங்கிரஸ் சதித்திட்டம் தீட்டுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக, அந்த மாநில பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்சியுமான ஜெயேஷ் பிரசாத் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டி வருகிறது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com