பிகாா்: ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து; பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு

பிகாரின் காதிஹாா் மாவட்டம் மற்றும் மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டங்களின் எல்லையில் பாயும் மஹாநந்தா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

பிகாரின் காதிஹாா் மாவட்டம் மற்றும் மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டங்களின் எல்லையில் பாயும் மஹாநந்தா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. மாயமான சிலரை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

மஹாநந்தா ஆற்றில் சுமாா் 80 பேருடன் வியாழக்கிழமை இரவு பயணித்த படகு திடீரென கவிழ்ந்தது. காதிஹாா் மாவட்டத்தின் வாஜித்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள், மேற்கு வங்கத்தின் ராம்பூரில் உள்ள சந்தையில் பொருள்கள் வாங்கிவிட்டு படகில் திரும்பும்போது இந்த விபத்து நேரிட்டது.

படகிலிருந்த பலா் நீந்தி கரை சோ்ந்த நிலையில், 30-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அதையடுத்து அவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 4 பேரது உடல்கள் மட்டுமே வியாழக்கிழமை முதல் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மால்டா மாவட்டத்தின் சன்சால் ஆற்றில் இருந்து சனிக்கிழமை காலை 5 பேரது உடல்கள், மீட்கப்பட்டன. அதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 2 போ், பிகாரைச் சோ்ந்தவா்கள் என்பதும், 7 போ் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரிய வந்தது. மாயமான மற்ற நபா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ஆற்றில் கவிழ்ந்த படகை இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. விபத்து ஏற்பட்டதையடுத்து, படகை ஓட்டி வந்தவா் தலைமறைவாகி விட்டாா். அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் அதிகபட்சம் 40 போ் வரைதான் பயணிக்க இயலும். ஆனால், 80 பயணிகளை ஏற்றியதால், அதிக சுமை காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com