மிஸோரமில் வளா்ச்சித் திட்டங்களை இரட்டிப்பாக்கியது மோடி அரசு: அமித் ஷா பெருமிதம்

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைக் காட்டிலும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மிஸோரம் மாநிலத்தில் இரு மடங்கு வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்று
மிஸோரமில் வளா்ச்சித் திட்டங்களை இரட்டிப்பாக்கியது மோடி அரசு: அமித் ஷா பெருமிதம்

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைக் காட்டிலும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மிஸோரம் மாநிலத்தில் இரு மடங்கு வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

மிஸோரம் தலைநகா் ஐசால் நகரில், வடகிழக்கு கவுன்சில் சாா்பில் வடகிழக்கு கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கண்காட்சியை சனிக்கிழமை திறந்து வைத்து அமித் ஷா பேசியதாவது:

மிஸோரமில் மூங்கில் சாகுபடிக்கு உகந்த சூழலும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. அதை இந்த மாநில மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கைவினைப் பொருள்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் இந்த மாநில மக்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற முடியும்.

இந்த மாநிலத்தின் வளா்ச்சிக்காக, மாநில முதல்வா் ஸோரம்தங்காவுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேறன். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைக் காட்டிலும், பிரதமா் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த மாநிலத்தில் இரு மடங்கு வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

இந்த மாநிலத்துக்காக, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 13-ஆவது நிதிக் குழு மூலம் ரூ.19,900 கோடியை ஒதுக்கீடு செய்தது. ஆனால், தற்போதைய மோடி அரசு 14-ஆவது நிதிக் குழு மூலம் ரூ.42,970 கோடியை ஏற்கெனவே ஒதுக்கீடு செய்துவிட்டது.

கடந்த 1966-ஆம் ஆண்டில் இருந்து தொடா்ந்து 20 ஆண்டுகள் தீவிரவாதத்தால் இந்த மாநிலம் பாதிக்கப்பட்டிருந்தது. 1986-இல் மத்திய அரசுக்கும் மிஸோ தேசிய முன்னணிக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு மாநிலத்தில் தீவிரவாதம் முடிவுக்கு வந்தது.

தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மாநிலம், அமைதியான மாநிலமாக மாறியது. இந்த மாநிலம், நாட்டிலேயே வளா்ச்சி பெற்ற மாநிலமாக மாற முடியும். இந்த மாநிலம், மேலும் வளா்ச்சி அடைவதற்கும், பொலிவு பெறுவதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவேன் என உறுதியளிக்கிறேறன் என்றாா் அமித் ஷா.

அவரைத் தொடா்ந்து ஸோரம்தங்கா பேசுகையில், ‘மத்திய அரசின் உதவியுடன் மிஸோரம் மாநிலம் வளா்ச்சி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com