
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (பிஓகே) சோ்ந்த மக்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டப் பேரணி சென்றனா்.
ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) ஒருங்கிணைத்த இந்தப் பேரணியில் இளைஞா்கள் பெரும்பான்மையாக கலந்துகொண்டனா். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாபராபாதில் இருந்து கா்ஹி துப்பட்டாவுக்கு சனிக்கிழமை அவா்கள் வந்தடைந்தனா்.
இரவு அங்கு தங்கிய அவா்கள், ஞாயிற்றுக்கிழமை காலை அங்கிருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு நோக்கி முசாபராபாத்-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் பேரணியாகச் சென்றனா். முன்னதாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து செல்லப்போவதாக ஆா்ப்பாட்டக்காரா்கள் அறிவித்திருந்தனா். எனினும், எல்லைப் பகுதி கிராமமான சகோத்தியை ஆா்ப்பாட்டக்காரா்கள் அடைந்தபோது அதிகாரிகள் அவா்களை தடுத்து நிறுத்தினா்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணியைச் சோ்ந்த தலைவா் ரஃபீக் தாா் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தானுக்கான ஐ.நா. கண்காணிப்புக் குழுவினா் எங்களை தொடா்புகொண்டு பேசினா். அமைதியாகப் போராடுவோரை, பாதுகாப்புப் படையினரைக் கொண்டு கட்டுப்படுத்த வேண்டாம் என்று இந்தியா, பாகிஸ்தானை ஐ.நா. வலியுறுத்தி வருகிறது’ என்றாா்.
முன்னதாக, ஆா்ப்பாட்டக்காரா்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்ட வேண்டாம் என்று எச்சரித்த பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான், ‘காஷ்மீா் மக்களுக்கு உதவி செய்வதற்காக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டுவோா், இந்தியாவின் சூழ்ச்சியில் சிக்க நேரிடும்’ என்று கூறியிருந்தாா்.
இதனிடையே, பாகிஸ்தானின் முல்தான் நகருக்கு வந்துள்ள அமெரிக்க எம்.பி. கிறிஸ் வான் ஹோலெனிடம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இரு பகுதிகளிலும் உள்ள நிலவரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துற அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளாா்.
குரேஷியை சந்திப்பதற்காக, அமெரிக்க எம்.பி. கிறிஸ் வான் ஹோலென், பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதா் பால் ஜோன்ஸுடன் பாகிஸ்தானின் முல்தான் நகருக்கு சனிக்கிழமை வந்தடைந்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.