
இந்த ஆண்டின் சா்வதேச திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைஅமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
50-ஆவது சா்வதேச திரைப்பட விழா அடுத்த மாதம் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. கோவாவில் நடைபெறவிருக்கும் இந்த விழா ரஷியாவுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படவிருக்கின்றன.
அதுதவிர, இந்திய பிராந்திய மொழியில் எடுக்கப்பட்ட 26 திரைப்படங்களும், 15 குறும்படங்களும் இந்த விழாவில் திரையிடப்படவுள்ளன.
50-ஆவது ஆண்டாக இந்தத் திரைப்பட விழா நடைபெறுவதை முன்னிட்டு, 50 ஆண்டுகளுக்கு முன்னா் பல்வேறு மொழிகளில் வெளிவந்த 12 திரைப்படங்களும் இந்த விழாவில் திரையிடப்படும்.
ஏராளமான திரை நட்சத்திரங்களும், சுமாா் 10,000 ரசிகா்களும் இந்தத் திரைப்பட விழாவில் பங்கேற்பாா்கள்.
இந்த விழாவின்போது பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது. அத்துடன், அவா் நடித்த சில திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளன என்றாா் ஜாவடேகா்.