
திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 49 பிரபலங்களுக்கு எதிராக தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்காக "கேரள சலசித்ர அகாதெமி' கண்டனம் தெரிவித்துள்ளது.
கும்பல் கொலை சம்பவங்கள் தொடர்பாக கவலை தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், அந்தப் பிரபலங்களுக்கு எதிராக தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அகாதெமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திரைப்பட இயக்குநர்கள், கலாசார ஆர்வலர்கள் ஆகியோருக்கு எதிராக தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்ட நடவடிக்கையானது, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.
மனிதநேயத்துக்கு எதிரான செயல்களுக்கு எதிராக கவலை தெரிவித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த நடவடிக்கை, நாகரிகமடைந்த ஜனநாயக சமுதாயத்துக்கு ஏற்ற செயல் அல்ல. மாறுபட்ட கருத்துகளை தெரிவிப்போரின் குரலை மத்திய அரசு ஒடுக்குகிறது.
இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் தனது திரைப்படங்களின் மூலம் மனித மாண்புகளை உயர்த்திப் பிடித்தவர். அவருக்கு எப்போதும் கேரள சலசித்ர அகாதெமி துணை நிற்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, திரைப்பட இயக்குநர்கள் அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், நடிகை அபர்ணா சென் உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக பிகார் மாநிலம் முசாஃபர்பூரில் வியாழக்கிழமை தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் மீது வழக்குப் பதியுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பிறகு, தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வழக்குப் பதிய உத்தரவிட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்: கும்பல் கொலை சம்பவங்கள் தொடர்பாக கவலை தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்த பிரலபலங்கள் மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, நாட்டில் சர்வாதிகாரப்போக்கு இருப்பதை பிரதிபலிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "முக்கியமான விவகாரங்களில் தங்களது கருத்தை தெரிவிக்கும் வகையில் பிரதமருக்கு கடிதம் எழுதும் செயல் குற்றமோ, தேச விரோதமோ அல்ல. ஆனால், தற்போதைய அரசின் கொள்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் தண்டிக்கப்படுகின்றனர்.
மாறுபட்ட கருத்து தெரிவிப்பதற்காக வழக்குப் பதிவு செய்யப்படுவது, ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதையும், நாட்டில் சர்வாதிகாரம் நிலவுவதையும் பிரதிபலிக்கிறது. பிரபலங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள தேச விரோத வழக்கு ரத்து செய்யப்பட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.