
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்குப் பாய்ந்தோடும் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கேட்டு வரைவு திட்ட விளக்க அறிக்கையை கர்நாடக அரசு கடந்த ஆண்டு அனுப்பியிருந்தது.
புது தில்லியில் ஜூலை 19-ஆம் தேதி நடந்த மத்திய அரசின் ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்களுக்கான நிபுணர் பகுப்பாய்வுக் குழுவின் 25-ஆவது கூட்டத்தில் இதை ஆய்வுசெய்து, இங்கு விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து கர்நாடக அரசின் சார்பில் மேக்கேதாட்டு திட்டத்தைச் செயல்படுத்தவுள்ள காவிரி நீர்ப் பாசன நிறுவனத்திடம் 4 விஷயங்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் இருமாநில அரசுகளும் சுமுகமான தீர்வுக்கு வரும்படி இக் குழு கேட்டுக் கொள்கிறது. அதன்பிறகு, இத் திட்டத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யலாம் என்று கூட்டத்தில் குழு முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்கள் நிபுணர் பகுப்பாய்வுக் குழுவின் இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலாளர் டாக்டர் எஸ்.கேர்கெட்டாவுக்கு அக்.4-ஆம் தேதி காவிரி நீர்ப்பாசன நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் சங்கரே கெளடா, கர்நாடக அரசின் சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில்: காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு மண்டியா மாவட்டத்தின் மலவள்ளி வட்டம், ராமநகரம் மாவட்டத்தின் கனகபுரா வட்டம், சாமராஜ்நகர் மாவட்டத்தின் கொள்ளேகால் வட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவில், மண்டியா மாவட்டத்தின் மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு தகுந்த இடம் என்று உறுதி செய்யப்பட்டது. இங்கு, ரூ.9 ஆயிரம் கோடி செலவில் 88 அடி உயரத்தில் 67.16 டிஎம்சி தண்ணீர் சேமிக்கக்கூடிய அணையைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக 5252.40 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இந்த இடத்தில் அணை கட்டினால், குறைந்த அளவாக 4,996 ஹெக்டேர் வனப்பகுதிப் பரப்பு மட்டுமே நீரில் மூழ்கும் நிலை உள்ளது. இந்த இடத்தில் அணை கட்டினால் வனப் பகுதிகளைப் பாதுகாப்பதோடு, மீன்வள மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும்.
காவிரி நடுவர் மன்றம் அளித்திருந்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018ஆம் ஆண்டு பிப்.16-ஆம் தேதி தீர்ப்பு அளித்திருந்தது. அந்தத் தீர்ப்பில் ஒரு மாநிலத்தின் சொந்த நீர்வளத்தில் இருந்து பெறப்படும் நீரைப் பயன்படுத்துவதற்கு கீழமை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே ஆற்றுநீர் பாயும் நிலையில், மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாமே தவிர, சொந்த மாநில நீர்வளத்தை பயன்படுத்திக்கொள்ள இதர கீழமை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின்படி மாதவாரியாக தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நீரைத் திறந்துவிடவும், பெங்களூரு மாநகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்கு குடிநீர் வழங்கவும் காவிரி ஆற்றுநீரைச் சேமித்து வைத்துக்கொள்ள மேக்கேதாட்டு அணை திட்டம் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, கீழமை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நீரைத் தந்துவிட்டு, சொந்த விருப்பத்தின்பேரில் மேக்கேதாட்டு அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த கர்நாடகத்துக்கு உரிமை உள்ளது புலப்படும். இரு மாநிலங்களின் எல்லைப் பகுதியான பிலிகுண்டலுவில் அமைந்துள்ள மத்திய நீர் ஆணையத்தின் அளவை மையத்தில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவைக் காட்டிலும், கூடுதல் நீர் பாய்ந்து செல்கிறது.
இந்த கூடுதல் நீர் வீணாக கடலில் கலக்கிறது. கடந்த 45 ஆண்டுகால புள்ளிவிவரங்களை ஆராய்ந்ததில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட 177.25 டிஎம்சி நீரைக் காட்டிலும், கூடுதல் நீர் தமிழகத்துக்குச் சென்றுள்ளது. நன்றாக மழை பெய்யும் காலத்தில் நீரைச் சேமித்து வைத்து, தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நீரைத் திறந்து விடுவதற்கு மேக்கேதாட்டு அணை கட்டுவது அவசியமாகும்.
எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க, இந்த திட்டத்தை கர்நாடக அரசு சொந்தமாக நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதால், இந்த விவகாரத்தில் தமிழக அரசுடன் கர்நாடக அரசு சுமுக தீர்வு காண வேண்டிய அவசியம் எழவில்லை. இவற்றின் அடிப்படையில், வெகுவிரைவாக மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.