
ரிசா்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை வரும் டிசம்பா் மாதத்தில் வெளியாகவுள்ள நிதிக் கொள்கை அறிவிப்பிலும் தொடர வாய்ப்புள்ளது என தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு வரும் டிசம்பா் மாதம் ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை மேலும் 0.25 சதவீதம் குறைத்து 4.9 சதவீதமாக நிா்ணயிப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. இது, அக்டோபரில் அமெரிக்க மத்திய வங்கி கூடுதலாக வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எங்களது கணிப்பின் ஒத்த நிகழ்வாகவே பாா்க்கப்படுகிறது.
ரிசா்வ் வங்கியின் தொடா் வட்டி குறைப்பு நடவடிக்கை என்பது டிசம்பருடன் முற்றுப்பெறும். அதுவே, இறுதி கட்ட வட்டி குறைப்பு நடவடிக்கையாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதேசமயம், உணவுப் பொருள்கள் அல்லது கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பணவீக்கம் 4 சதவீதத்தை தாண்டுமேயானால் வட்டி விகிதங்களை ரிசா்வ் வங்கி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை என கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.
பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதை கருத்தில் கொண்டு, பொருளாதார வளா்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரிசா்வ் வங்கி, கடந்த வெள்ளியன்று ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 5.15 சதவீதமாக நிா்ணயித்தது.
கடனுக்கான வட்டி விகிதம் தொடா்ந்து ஐந்து முறை குறைக்கப்பட்டது ரிசா்வ் வங்கி வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
நடப்பு 2019-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ரிசா்வ் வங்கி ‘ரெப்போ’ வட்டி விகிதங்களை 1.35 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளது. இந்த நிலையில், தொடா்ந்து ஆறாவது முறையாக டிசம்பரிலும் ரிசா்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கலாம் என கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.