
ஹரியாணா பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அனைத்து வேளாண் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா தெரிவித்தார்.
ஹரியாணா சட்டப் பேரவைக்கான தேர்தல் அக். 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் குமாரி செல்ஜா தெரிவித்ததாவது:
ஹரியாணா பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதில் வேளாண் கடன் தள்ளுபடி பற்றிய வாக்குறுதி இடம் பெறும் என்பது மட்டும் நிச்சயம். அதுதவிர, ஏழை எளிய மக்கள் பெற்றுள்ள சிறு கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். ஆட்சிக்கு வந்த சில நாள்கள் அல்லது ஓரிரு வாரங்களில் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றதும் காங்கிரஸ் தனது வேளாண் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றியது. அதுபோலவே ஹரியாணாவிலும் நிறைவேற்றுவோம்.
பேரவைத் தேர்தலுக்கு முன்பாக முதல்வர் யார் என்பதை வெளியிடும் வழக்கம் காங்கிரஸ் கட்சியில் இல்லை. அதே நடைமுறைதான் இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் எந்தக் குழப்பமும் இல்லை. தேர்தல் நேரத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சிலருக்கு அதிருப்தி ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான் என்று குமாரி செல்ஜா கூறினார்.