சபரிமலை விவகாரத்தில் சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலனை: மத்திய அமைச்சர் தகவல்!

சபரிமலை விவகாரத்தில் சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலனை: மத்திய அமைச்சர் தகவல்!

சபரிமலை விவகாரத்தில் சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் சதானந்த கௌடா தெரிவித்துள்ளார்.


சபரிமலை விவகாரத்தில் சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் சதானந்த கௌடா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோட்டில் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சதானந்த கௌடா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து எடுத்த நடவடிக்கைபோல், சபரிமலை விவகாரத்துக்கும் சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். 

இதுகுறித்து மேலும் பேசிய அவர், 

"1952 முதல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது எங்களது விருப்பமாக இருந்தது. தற்போது அதைச் செய்துள்ளோம். இதேபோல், சபரிமலை விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்களது நடவடிக்கை மிகவும் வலிமையாக இருக்கும். அதை முன்னெடுத்துச் செல்வதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாங்கள் நீதித் துறையை மதிப்பதால், இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்" என்றார்.

முன்னதாக:

கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி சபரிமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணி அரசு அமல்படுத்த முயன்றது. 

அரசின் முடிவு, கேரளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஏராளமான ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி, கேரளத்தைச் சேர்ந்த 50 வயதுக்கும் குறைவான பெண்கள் 2 பேர் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்ததை அடுத்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டது.

இதனிடையே, சபரிமலை கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசம் மேற்கொள்ளலாம் என்ற உத்தரவை எதிர்த்து பல்வேறு சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவை இன்னும் நிலுவையில் உள்ளது.

அதேசமயம் கேரளாவில் ஆட்சியில் இருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கேரளத்தின் 20 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மீதியுள்ள 19 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com