இந்தியா ஹிந்து தேசம்தான் என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருக்கிறது: மோகன் பகவத்

இந்தியா ஹிந்து தேசம்தான் என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருப்பதாக அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். 
இந்தியா ஹிந்து தேசம்தான் என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருக்கிறது: மோகன் பகவத்


இந்தியா ஹிந்து தேசம்தான் என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருப்பதாக அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் விஜயதசமி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாதான் ஹிந்து தேசம் என்ற செயல்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் மேலும் பேசுகையில், 

"நமது நாட்டின் அடையாளம், நமது சமூக அடையாளம் மற்றும் நாட்டின் இயல்பான அடையாளம் உள்ளிட்டவற்றைப் பொறுத்தவரை ஆர்எஸ்எஸ் தெளிவாக இருக்கிறது. இந்தியாதான் ஹிந்துஸ்தான், ஹிந்து தேசம் என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருக்கிறது. 

இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இந்திய முன்னோர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள், தேசத்தின் பெருமைக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்கள், அமைதியை நிலைநாட்ட ஒன்றிணைபவர்கள், பன்முகத்தன்மையை வரவேற்று அதை மதிப்பவர்கள் என அனைத்து இந்தியர்களும் ஹிந்துக்கள்தான். ஒரு ஹிந்து பன்முகத்தன்மையை ஏற்று, நம்பிக்கைக்கு மதிப்பளித்து, நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம். இவை கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம். ஆனால், உலகம் வலிமை மிகுந்ததைத்தான் கேட்கும். 

இவற்றைதான் ஆர்எஸ்எஸ் கடந்த 10-15 ஆண்டுகளாக பேசி வருகிறது. 

2009-இல் நான் ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்தபோது, நான் பேசுவதைக் கேட்பதற்கு நிறைய பேர் கிடையாது. ஆனால் இன்றைக்கு பேசுவதைக் கேட்க நிறைய மக்கள் இருக்கிறார்கள். இதற்கான காரணம், பல்வேறு துறைகளில் ஆர்எஸ்எஸ் அடைந்துள்ள வளர்ச்சிதான். 

அதிகாரம் இல்லையென்றால் உலகம் ஒருபோதும் உங்களைக் கண்டுக்கொள்ளாது. வலிமையானவர்கள் குறித்து யாரும் கவலை கொள்ளமாட்டார்கள். அவர்களது நலன்களைப் பாதுகாக்கக்கூட யாரும் முயற்சிக்க மாட்டார்கள்.

இந்தியா மீது படையெடுத்தவர்கள் சிலரால்தான் இஸ்லாம் இந்தியாவுக்கு வந்தது. சில போர்களும் நடைபெற்றது. இதன் நினைவுகள் இன்னும் மக்கள் மனதில் உலவிக் கொண்டு இருக்கிறது. இருந்தபோதிலும், ஹிந்துக்களை ஒருங்கிணைப்பதன் மூலம், அது இஸ்லாமுக்கு எதிரானது என்று அர்த்தமாகிவிடாது. எந்தவொரு ஆர்எஸ்எஸ் நிர்வாகியும் இப்படி சிந்திக்க மாட்டார். அதேசமயம், எந்தவொரு நேரத்திலும் ஆர்எஸ்எஸ் இப்படிப்பட்ட கருத்துகளை முன்வைக்காத நிலையில், ஒரு சிலர் இப்படி பேசுகின்றனர்.

அவர்களுடைய கருத்துகள் எங்களுடைய நிலைப்பாடாக முத்திரை குத்தப்பட்டது. பிரசாரங்கள் இப்படிதான் உருவம் பெறும். 

உலகின் இருப்பில் ஒரு உண்மை இருக்கிறது என்பதை ஒரு ஹிந்து நம்புவார். இங்கு பல வகை மக்கள் இருக்கிறார்கள், உண்மையைப் புரிந்துகொள்வதில் வெவ்வேறு வழிகள் இருக்கிறது மற்றும் ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் அணுகும் முறையும் இருக்கிறது. அவர்களது இடத்தில் இருக்கும் அனைத்தும் சரியானதுவே. இதை நாங்கள் இப்படி பல்வேறு கோணங்களில் பார்க்கிறோம். யாரும் எதையும் மாற்றவும் வேண்டாம், முடிவுக்கும் கொண்டுவர வேண்டாம். அவரவர் அவர்களது பாதையில் சென்றால்போதும், ஒருநாள் இலக்கை அடையலாம்.

ஆன்மாவில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதை அவரவர் முடிவு செய்துகொள்ளலாம். கடவுள் ஒன்றாக இருக்கலாம் அல்லது பல கடவுளாக இருக்கலாம். அதை அவரவர் முடிவு செய்துகொள்ளலாம். ஆனால் தர்மத்தைப் பின்பற்ற வேண்டும். அதை ஒரு பிரிவாக/வகுப்பாக உருவாக்குவதுதான் பிரச்னையை உண்டாக்குகிறது. 

தர்மத்தைப் பொறுத்தவரை அது ஒன்றுதான். அது மனிதநேயம் என்று அழைக்கப்படும். அது சமகாலத்தில் ஹிந்து தர்மா என்று அறியப்படுகிறது.

வேறு எந்தவொரு நாட்டிலும் வாழ்க்கையை இப்படி அணுகும் முறை கிடையாது. இதை ஹிந்துயிஸம் என்று அழைக்காவிட்டால், வேறு எப்படி அழைப்பது? இந்த அர்த்தத்தின் மூலம் யாரையும் எதிர்ப்பதற்கான நோக்கம் கிடையாது. வார்த்தைகளைத் தேர்வு செய்வதில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். 

இதை ஹிந்துயிஸம் என்று அழைப்பதற்கு இன்னும் சிலருக்கு விருப்பமில்லை. அவர்கள் 'பாரதிய' என்பதைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், பரவாயில்லை. அவர்கள் கூற வருவது எங்களுக்குப் புரிகிறது. நாங்கள் அவர்களை மதிக்கிறோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com