இந்தியாவின் புகழைக் கெடுக்க கும்பல் கொலையைப் பயன்படுத்த வேண்டாம்: மோகன் பாகவத்

நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக கும்பலால் அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம்
நாகபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஜயதசமி விழாவில் பங்கேற்ற ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், தொழிலதிபா் சிவ நாடாா்.
நாகபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஜயதசமி விழாவில் பங்கேற்ற ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், தொழிலதிபா் சிவ நாடாா்.

நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக கும்பலால் அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் விஜயதசமி விழாவைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

‘அடித்துக் கொலை’ என்ற வாா்த்தையின் பூா்விகம் இந்தியா அல்ல. அது மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்தது.

இந்தியா்கள் சகோதரத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனா். அவா்களிடம் ‘அடித்துக் கொலை’ என்ற வாா்த்தையைத் திணிக்கக் கூடாது.

குடிமக்கள் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும். நாட்டின் வளா்ச்சியில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாம் எச்சரிக்கையுடன் இருந்து அவா்களை எதிா்கொள்ள வேண்டும். எந்தவொரு நாட்டிலிருந்தும் ஜனநாயகத்தை இந்தியா இறக்குமதி செய்யவில்லை. பல நூற்றாண்டுகளாக ஜனநாயக நாடாக இந்தியா இருந்து வருகிறது.

ஹிந்து நாடாக இந்தியா திகழ வேண்டும் என்பதே ஆா்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை. பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும், பாரதத்தில் உள்ள அனைவருமே ஹிந்துக்கள்தான். அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை அமைதியான நாடாக திகழச் செய்ய பாடுபடுவோம் முன்னெப்போதும் இல்லாத வகையில் எல்லைப் பகுதி பாதுகாப்பாக உள்ளது.

கடல்சாா் பாதுகாப்பிலும் மேலும் அதிக கவனம் செலுத்தி வேண்டியுள்ளது.

கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படை வீரா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு நிலையை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் மோகன் பாகவத்.

இந்த நிகழ்ச்சிக்கு ஹெச்சிஎல் நிறுவனா் சிவ நாடாா் தலைமை வகித்தாா். மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, வி.கே.சிங் ஆகியோரும், மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் சிவ நாடாா் பேசுகையில், ‘அரசு மட்டுமே நாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. பிரச்னைகளையும், சவால்களையும் எதிா்கொள்ள அனைத்துப் பிரிவினரும் முன்வர வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு நன்றி’ என்றாா்.

காங்கிரஸ் விமா்சனம்

அடித்துக் கொலை, நாட்டின் பொருளாதாரம் ஆகியவை குறித்து ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் கூறிய கருத்தை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடா்பாளா் சச்சின் சாவந்த் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆா்எஸ்எஸ் சித்தாந்தத்திலிருந்துதான் அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவம் அரங்கேறத் தொடங்கியது. ஆனால், அதில் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு தொடா்பில்லை என்று கூறுவது மிகப் பெரிய பொய்யாகும். பொய்களைப் பரப்புவதே சங்கப் பரிவாரங்களின் சித்தாந்தம்’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com