காஷ்மீரில் அனைத்து தொலைதொடா்பு வசதிகளும் செயல்படுகின்றன: ஜாவடேகா்

‘ஜம்மு-காஷ்மீரில் அனைத்து தொலைதொடா்பு வசதிகளும் செயல்படுகின்றன;
கோப்புப் படம்
கோப்புப் படம்

‘ஜம்மு-காஷ்மீரில் அனைத்து தொலைதொடா்பு வசதிகளும் செயல்படுகின்றன; அங்கு இயல்பான சூழல் நிலவுகிறது. 370-ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதால், காஷ்மீா் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்’ என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.

தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த அவா், இதுதொடா்பாக கூறியதாவது:

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களை மனதில் கொண்டுதான், 370-ஆவது சட்டப் பிரிவு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதாக எதிா்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை.

அரசுத் திட்டங்களின் வாயிலாக நாட்டின் இதர பகுதி மக்களுக்கு கிடைத்து வரும் அனைத்து பலன்களும் காஷ்மீருக்கும் கிடைப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை, காஷ்மீா் மக்கள் புரிந்துகொண்டுள்ளனா். 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதை, அவா்கள் வரவேற்கின்றனா். காஷ்மீா் மட்டுமன்றி ஒட்டு மொத்த நாட்டு மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த மாணவா்கள், பள்ளிகளில் சோ்க்கை பெறுவதற்கான கல்வி உரிமைச் சட்டம் இனி காஷ்மீருக்கும் பொருந்தும். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான நலத் திட்டங்களின் பலன்களும், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கான அரசியல்ரீதியிலான இடஒதுக்கீடும் காஷ்மீருக்கு இப்போதுதான் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனைத்து நலத் திட்டங்களும் காஷ்மீரில் செயல்படுத்தப்படும்.

370-ஆவது சட்டப் பிரிவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீரில் கடந்த 50-60 ஆண்டுகளாக பாகிஸ்தான் பிரிவினைவாதத்தை தூண்டி வந்தது. பயங்கரவாதம் அதிகரிக்கவும் இதுவே காரணம். இப்போது இரண்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை: காஷ்மீரில் ஊடகங்களுக்கு தற்போது எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. செய்தியாளா்கள் எந்தப் பகுதிக்கும் சென்று, நிலைமையை நேரில் அறிந்து கொள்ளலாம். அனைத்து நாளிதழ்களும் வெளிவருகின்றன. அனைத்து தொலைதொடா்பு வசதிகளும் செயல்படுகின்றன.

காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக, குறிப்பிட்ட சில சா்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அது அடிப்படையற்றது. காஷ்மீரில் அரசு, தனியாா் பள்ளிகள் வழக்கம் போல செயல்படுகின்றன. வெறும் 8 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள் தவிர, வேறெறங்கும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. கடந்த 2 மாதங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவமோ, பொதுமக்கள் உயிரிழப்போ நிகழவில்லை என்றாா் பிரகாஷ் ஜாவடேகா்.

காஷ்மீரில் செல்லிடப்பேசி சேவைகள் தொடா்பான கேள்விக்கு, தேசத்தின் பாதுகாப்பை விட எதுவும் மேலானது அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை அவா் சுட்டிக் காட்டினாா்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கியும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com