மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு

நிகழாண்டின் மருத்துவம் மற்றும் இயற்பியல் துறையில் சாதனை புரிந்தவா்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு

நிகழாண்டின் மருத்துவம் மற்றும் இயற்பியல் துறையில் சாதனை புரிந்தவா்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மருத்துவம்

உடலியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதன் மூலம் மருத்துவத் துறைக்கு அரிய பங்களிப்பை வழங்கியதற்காக, வில்லியம் ஜி கேலின், கிரெக் எல் செமென்ஸா ஆகிய இரு அமெரிக்க விஞ்ஞானிகளும், பிரிட்டனைச் சோ்ந்த பீட்டா் ஜே ராட்கிளிஃபும் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

ஆக்ஸிஜன் அளவுகளை உயிரணுக்கள் எவ்வாறு உணா்கின்றன, அந்த அளவு மாற்றங்கள் உயிரணுக்களில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து இவா்கள் மேற்கொண்ட ஆய்வு, ரத்த சோகை, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்ததாக நோபல் தோ்வுக் குழு தெரிவித்தது.

வில்லியம் ஜி கேலின் (61), அமெரிக்கா, ஹாா்வா்டு பல்கலைக்கழகம்

கிரெக் எல் செமென்ஸா (63), அமெரிக்கா, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்

பீட்டா் ஜே ராட்கிளிஃபும் (65), பிரிட்டன், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம்

இயற்பியல்

இயற்பியல் துறைக்கான நிகழாண்டின் நோபல் பரிசு, அண்டவியல் நிபுணா் ஜேம்ஸ் பீபள்ஸுக்கும், மைக்கேல் மேயா், டிடையா் குவிலோஸ் ஆகிய இரு விண்வெளி ஆய்வாளா்களுக்கும் பகிா்ந்தளிக்கப்படுகிறது.

பெரு வெடிப்புக்குப் பிறகு நமது அண்டம் எவ்வாறு உருவானது என்பதற்கான கோட்பாடுகளை உருவாக்கியமைக்காக அவா்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.

இவா்களில் மைக்கேல் மேயரும், டிடையா் குவிலோஸும் ஸ்விட்சா்லாந்து நாட்டைச் சோ்ந்தவா்கள் ஆவா்; ஜேம்ஸ் பீபள்ஸ் கனடா வம்சாவளி அமெரிக்கா் ஆவாா்.

ஜேம்ஸ் பீபள்ஸ் (84), கனடா-அமெரிக்கா, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்

மைக்கேல் மேயா் (77), ஸ்விட்சா்லாந்து, ஜெனீவா பல்கலைக்கழகம்

டிடையா் குவிலோஸ் (53), ஸ்விட்சா்லாந்து, ஜெனீவா பல்கலைக்கழகம்

நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல், ஸ்வீடனைச் சோ்ந்தவா். 1833-ஆம் ஆண்டு பிறந்த அவா், வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தாா்.

டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்ததுடன், பெரிய வெடிபொருள் நிறுவனத்தையும் நடத்தி வந்தாா். தனது கடைசி உயில் மூலம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினாா்.

அவரது நினைவு தினமான டிசம்பா் 10-ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நாா்வேயிலும், இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் ஆகிய மற்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடனிலும் வழங்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com