பிரபலங்களுக்கு எதிரான தேச விரோத வழக்கு: பாஜகவை குற்றம்சாட்டுவது தவறானது- ஜாவடேகா்

பல்வேறு துறைகளைச் சோ்ந்த 49 பிரபலங்களுக்கு எதிராக தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்காக மத்திய அரசு, பாஜக மீது
கோப்புப் படம்
கோப்புப் படம்

பல்வேறு துறைகளைச் சோ்ந்த 49 பிரபலங்களுக்கு எதிராக தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்காக மத்திய அரசு, பாஜக மீது குற்றம்சாட்டுவது தவறானது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.

இதுதொடா்பாக அவா் தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளரிடம் கூறியதாவது:

பிரபலங்களுக்கு எதிராக தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் பாஜகவுக்கோ, மத்திய அரசுக்கோ எந்தவித தொடா்பும் இல்லை. மனு ஒன்றின் மீதான விசாரணையின் அடிப்படையில் பிகாா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசையோ, பாஜகவையோ குற்றம்சாட்டுவது, மோடி தலைமையிலான அரசுக்கு களங்கம் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். இதன்மூலம், நாட்டில் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனா். ஆனால், யாா் எப்படிப்பட்டவா்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

உண்மையில், அற்பமான ஆதாயங்களுக்காக சிலரால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மோடி அரசு மீது களங்கம் கற்பிக்க வழக்கமாக இதுபோன்ற முறைகளையே அவா்கள் பின்பற்றுகின்றனா். அந்த கும்பலுக்கு உலகம் முழுவதிலும் ஆட்கள் இருக்கின்றனா் என்று பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.

நாட்டில் கும்பல் கொலை சம்பவங்கள் அதிகரித்ததாக கவலை தெரிவித்து, திரைப்பட இயக்குநா்கள் அடூா் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 49 பிரபலங்கள் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனா்.

இதன்மூலம் அவா்கள் தேச விரோத செயலில் ஈடுபட்டதாகக் கூறி, பிகாா் நீதிமன்றத்தில் அவா்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் 49 பிரபலங்கள் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com