முடிவுக்கு வந்த இலவச அழைப்புகள்: இனி ஜியோவிலிருந்து வேறு நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் காசு பாஸ்

புதன்கிழமை முதல் ஜியோவிலிருந்து வேறு நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

புது தில்லி: புதன்கிழமை முதல் ஜியோவிலிருந்து வேறு நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொலைத்தொடர்புத் துறை சந்தையில் 2016-ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிரடியாக நுழைந்தது. அது அறிவித்த திட்டங்கள் மற்ற நிறுவனங்களை கலங்கடித்தது. அழைப்புகள், எஸ்.எம்.எஸ் மற்றும் டேட்டா என அனைத்தும் ப்ரீ  என்று அறிவித்து கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தனது பிடிக்குள் கொண்டு வந்தது. மற்ற நிறுவனங்களுக்கும் கடும் நெருக்கடி கொடுத்தது.

வாய்ஸ் கால்களை பொறுத்த வரை ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கை அழைக்கும்போது, குறிப்பிட்ட நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்திற்கு நெட்வொர்க் கனெக்சன் சார்ஜஸ் அல்லது இன்டர்கனெக்ட் யூசேஜ் சார்ஜஸ் (ஐ.யூ.சி) என்று பெயர்.

இதுதொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய தொலைத்தொடர்பு  ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்)  வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி அதுவரை நிமிடத்திற்கு 14 பைசாக்களாக இருந்த ஐ.யூ.சி நிமிடத்திற்கு 6 பைசாக்களாக  குறைக்கப்பட்டது. அத்துடன் ஜனவரி 2020-இல் இருந்து இது முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறப்பட்டது. இதையொட்டியே  2016-இல் சந்தைக்கு வந்த ஜியோ இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்காமல் சமாளித்து வந்தது.

ஆனால் சமீபத்தில் ட்ராய் வெளியிட்டுள்ள மற்றொரு ஆய்வறிக்கையில் இந்த ஐ.யூ.சி கட்டணங்களுக்கான அமலாக்க காலத்தை நீடிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக தற்போது ஜியோ நிறுவனம் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. ஐ.யூ.சி கட்டணங்கள் என்ற வகையில் ரூ. 13, 500 கோடியை செலுத்த வேண்டியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே அதை சமாளிக்கும் பொருட்டு தவிர்க்க இயலாமல், வேறுவழியின்றி  புதன்கிழமை முதல் ஜியோவிலிருந்து வேறு நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கபப்டும் என்று ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.யூ.சி கட்டணங்கள் முற்றிலுமாக விலக்கி கொள்ளப்படும் வரை இது தொடருமென்றும், அதேநேரம் ஜியோ நெட்வொர்க்குக்குள் செய்யப்படும் அழைப்புகளுக்கு  கட்டணம் கிடையாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இனி ஜியோவில் ரீசார்ஜ் செய்பவர்கள் இந்த கட்டணத் தொகையினை 'ஐ.யூ.சி ரீசார்ஜ் வவுச்சர்கள்' மூலம் செலுத்தலாம் என்றும், அதேநேரம் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்ப இலவச டேட்டா வழங்கப்படுவதால் அவர்களுக்கு இழப்பு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com