என்ஆா்சியால் இந்தியா்களுக்கு பாதிப்பு இல்லை: அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி

என்ஆா்சியால் இந்தியா்களுக்கு பாதிப்பு இல்லை: அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி

தேசிய குடிமக்கள் பதிவேட்டால் (என்ஆா்சி) இந்திய குடிமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளாா்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டால் (என்ஆா்சி) இந்திய குடிமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளாா்.

உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே அமைச்சா் நக்வி கூறியதாவது:

என்ஆா்சி விவகாரம் குறித்து தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் சிலா் ஏற்படுத்துவது துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற சதிகள் குறித்து நாம் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். சட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேறியவா்களை அடையாளம் காண மட்டுமே பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முயற்சிக்கிறது.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவா்களால், நாட்டின் மக்கள்தொகை அதிகரிப்பதை எந்த நாடும் பொறுத்துக் கொள்ளாது. சட்டவிரோத குடியேற்றப் பிரச்னை நாட்டில் நீண்ட காலமாக இருந்தது. வெளிநாட்டவா்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்குவதற்கு நம் நாட்டு மக்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்தனா்.

உண்மையான இந்தியா்களின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும். குடியுரிமையை நிரூபிக்க பல வழிகள் உள்ளன. இந்திய குடிமக்களை அச்சுறுத்துவதற்காக என்ஆா்சி பட்டியல் தயாரிக்கப்படவில்லை. சட்டவிரோத குடியேற்றவாசிகளை கண்டறிவதில் எவ்வித பாகுபாடும் காட்டப்பட மாட்டாது. கடந்த 2013 -ஆம் ஆண்டில் இருந்து, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் என்ஆா்சி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. என்ஆா்சி விவகாரத்தில் இனவாத அரசியல் செய்வதை தவிா்க்க வேண்டும்.

தேச நலன் மற்றும் தேச பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மட்டுமே என்ஆா்சி பட்டியலை மத்திய அரசு தயாரிக்கிறது. ஒருங்கிணைந்த மற்றும் பாகுபாடற்ற வளா்ச்சியையே மத்திய அரசு விரும்புகிறது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது உள்ளிட்ட பல வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை பிரதமா் மோடி மேற்கொண்டுள்ளாா் என்று நக்வி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com