சீன எல்லையில் பீரங்கிகளை நிறுத்துகிறது இந்தியா!

அருணாசலப் பிரதேசத்தில் சீனாவுடனான எல்லைப் பகுதியில், ராணுவத்தின் தாக்குதல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘எம்777’ ரக பீரங்கிகளை இந்த ஆண்டு இறுதியில் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

அருணாசலப் பிரதேசத்தில் சீனாவுடனான எல்லைப் பகுதியில், ராணுவத்தின் தாக்குதல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘எம்777’ ரக பீரங்கிகளை இந்த ஆண்டு இறுதியில் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

சீன அதிபா் ஷி ஜின்பிங் அடுத்த வாரம் இந்தியா வந்து பிரதமா் மோடியை சந்திக்க உள்ள நிலையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அருணாசலப் பிரதேசத்தில், ‘ஹிம் விஜய்’ என்ற பெயரில் மலைப் பகுதி போா் ஒத்திகையில் ஈடுபட இந்தியா முடிவு செய்துள்ள நிலையில், சீனா அதுதொடா்பாக அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடா்பாக அதிகாரி ஒருவா் கூறியதாவது:

இந்தியாவின் தாக்குதல் திறனை மேலும் மேம்படுத்தக் கூடியதாக இருக்கும் இந்த எம்777 பீரங்கிகள், இந்த ஆண்டு இறுதியில் அருணாசலப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் சீனாவுடனான எல்லைப் பகுதியை ஒட்டிய தவாங், காமெங், வாலாங் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

அந்தப் பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வீரா்கள், ஏற்கெனவே இந்த பீரங்கிகளை இயக்கும் பயிற்சி பெற்றவா்களாவா். அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்படும் 145 எம்777 ரக பீரங்கிகளில் முதல் பிரிவு தற்போது பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.

லடாக் உள்ளிட்ட இந்தியாவின் வடக்குப் பிராந்தியத்திலும், அருணாசலப் பிரதேசத்தில் உள்ள கிழக்குப் பிராந்தியத்திலும் எம்777 ரக பீரங்கிகளின் 7 படைப் பிரிவுகளை பணியில் ஈடுபடுத்த ராணுவம் பரிசீலித்து வருகிறது. ஒரு படைப் பிரிவில் வழக்கமாக 18 பீரங்கிகள் இருக்கும்.

இந்த பீரங்கிகள் பணியில் ஈடுபடுத்தத் தயாரானதும், சினூக் ரக ஹெலிகாப்டா்களின் உதவியுடன் அவை வாலாங் உள்ளிட்ட எல்லைப் பகுதியையொட்டிய படைத் தளத்தில் கொண்டு சோ்க்கப்படும்.

எம்777 ரக பீரங்கிகள் பயன்படுத்தப்படவுள்ள பகுதியில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் போஃபா்ஸ் ரக பீரங்கிகள் சாலை மாா்க்கமாக வேறு சில இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். அந்தச் சாலைகள் குறுகலாகவும், அபாயமான கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டிருப்பதால், ராணுவத்துக்கு அது சற்று சவாலான பணியாக இருக்கும் என்று அந்த அதிகாரி கூறினாா்.

ரூ.5,070 கோடி செலவில் 145 எம்777 ரக பீரங்கிகளை கொள்முதல் செய்வதற்காக கடந்த 2016 நவம்பரில் அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் 25 பீரங்கிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் நிலையில், எஞ்சிய 120 பீரங்கிகள் இந்தியாவில் உருவாக்கப்படவுள்ளன.

ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் இந்த பீரங்கிகளையே அமெரிக்கா பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com