மகாராஷ்டிர தேர்தல்: 13-ஆம் தேதி முதல் பிரதமர் மோடி பிரசாரம்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ஆம் தேதி பிரசாரத்தைத் தொடங்குகிறார். இது அந்த மாநில பாஜகவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
மகாராஷ்டிர தேர்தல்: 13-ஆம் தேதி முதல் பிரதமர் மோடி பிரசாரம்


மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ஆம் தேதி பிரசாரத்தைத் தொடங்குகிறார். இது அந்த மாநில பாஜகவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு வரும் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியில் உள்ள பாஜக-சிவசேனை கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் களமிறங்கியுள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி போட்டியில் உள்ளது.
இதில் பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நட்சத்திர பிரசார தூண்களாகத் திகழ்கின்றனர். மத்திய அரசு கடந்த 3 மாதங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள், மகாராஷ்டிரத்தில் தங்கள் கூட்டணிக்குப் பெரும் வெற்றியைப் பெற்றுத்தரும் என்று உள்ளூர் பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். முக்கியமாக ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, பெருவாரியான மக்களைக் கவர்ந்துள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, நாட்டின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதில் பாஜக தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அங்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பல தலைவர்கள் பாஜக மற்றும் சிவசேனையில் இணைந்துள்ளனர். இது அந்த இரு கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பாஜக கூட்டணி கடந்தமுறை இருந்ததைவிட இப்போது அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதே இப்போது தங்கள் இலக்கு. ஆட்சி அமைவது உறுதி என்று மகாராஷ்டிர பாஜகவினர் தெரிவித்துள்ளனர். அவர்களது இந்த நம்பிக்கைக்கு உரம் சேர்க்கும் வகையில், பிரதமர் மோடி மகாராஷ்டிரத்தில் 9 பொதுக் கூட்டங்களிலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா 18 பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்றுப் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். இது தங்கள் கட்சிக்குப் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று உள்ளூர் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமித் ஷா இந்த வாரத்தில் லட்டூரில் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். பிரதமர் மோடி, வரும் 13-ஆம் தேதி வடக்கு மகாராஷ்டிரத்தின் ஜல்காவ்னில் தனது முதல் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து அன்றைய தினமே சாகோலியிலும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். பின்னர் வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளிலும் பிரதமர் மோடி மகாராஷ்டிரத்தில் பல்வேறு இடங்களில் பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்கிறார். இறுதியாக 18-ஆம் தேதி மும்பையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com