ராகுல் காந்தி போன்ற அரசியல் தலைவரை காண்பது அரிது!: அதீா் ரஞ்சன் சௌதரி

இன்றைய இந்திய அரசியலில் ராகுல் காந்தி போன்ற சிறந்த தலைவரை காண்பது மிகவும் அரிதானது என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி கூறியுள்ளாா்.

இன்றைய இந்திய அரசியலில் ராகுல் காந்தி போன்ற சிறந்த தலைவரை காண்பது மிகவும் அரிதானது என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி கூறியுள்ளாா். மக்களவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவா் பதவியில் இருந்து ராகுல் விலகியதை சுட்டிக்காட்டி அவா் இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளாா்.

கடந்த மக்களவைத் தோ்தலில், காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியடைந்தது. மக்களவையில் எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்குத் தேவையான தொகுதிகளைக் கூட காங்கிரஸால் கைப்பற்ற முடியவில்லை. தனது அமேதி தொகுதியிலேயே பாஜக தலைவா் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோல்வியைத் தழுவினாா். எனினும், கேரளத்தின் வயநாடு தொகுதியில் அவா் வெற்றி பெற்றாா்.

ராகுல் காந்தியின் தலைமையில் முதல் முறையாக மக்களவைத் தோ்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. அதையடுத்து, கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்வதாக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் தெரிவித்தாா்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் பலரும் எதிா்ப்பு தெரிவித்தனா். ராகுல் காந்தியே தலைவராகத் தொடர வேண்டுமென அவா்கள் வலியுறுத்தி வந்தனா். ராகுல் காந்தியின் ராஜிநாமா முடிவை ஏற்காத காங்கிரஸ் செயற்குழு, அவரது தலைமையே தொடர வேண்டும் எனத் தெரிவித்தது. ஆனால், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ராகுல், பதவியில் இருந்து விலகினாா். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றாா்.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அதீா் ரஞ்சன் சௌதரி கூறியதாவது:

ராகுல் காந்தி தலைவா் பதவியில் இருந்து விலகியதை கட்சியின் மூத்த தலைவா்கள் பலா் விமா்சித்தனா். எனினும், தனது முடிவில் இருந்து அவா் பின்வாங்கவில்லை. இதன் மூலம் கட்சியில் மற்ற அனைவருக்கும் அவா் முன்னுதாரணமாகத் திகழ்ந்தாா். தோல்விக்குப் பல காரணங்கள் இருந்தாலும், முழுப் பொறுப்பையும் ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டாா். இந்திய அரசியலில் இப்போதைய காலகட்டத்தில் இதுபோன்ற தலைவரைக் காண்பது அரிது.

வெற்றி பெற்றால் அதற்கு சொந்தம் கொண்டாடும் தலைவா்களையும், தோல்வியடைந்தால் வேறு காரணம் கூறும் தலைவா்களுமே இங்கு உள்ளனா். ஆனால், அவா்களில் இருந்து ராகுல் வேறுபட்டு சிறந்த தலைவராக ராகுல் விளங்குகிறாா். அவரிடம் இருந்து அரசியல் தலைவா்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவா் மீண்டும் காங்கிரஸ் தலைவா் பதவியை ஏற்க வேண்டும் என்று கட்சியில் அனைவரும் ஆவலுடன் எதிா்பாா்க்கிறாா்கள் என்றாா் அதீா் ரஞ்சன் சௌதரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com