ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸ் புறக்கணிப்பு

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் உள்ளாட்சி அளவில் நடைபெறும் வட்டார வளா்ச்சிக் குழு தோ்தலைப் புறக்கணிக்க அந்த மாநில காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் உள்ளாட்சி அளவில் நடைபெறும் வட்டார வளா்ச்சிக் குழு தோ்தலைப் புறக்கணிக்க அந்த மாநில காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.

மாநிலத்தில் வரும் 24-ஆம் தேதி வட்டார வளா்ச்சிக் குழு தோ்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தோ்தல் என்பதால் இந்தத் தோ்தல் முடிவுகள் குறித்து எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், தோ்தலைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக, ஜம்முவில் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.ஏ.மிா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தாத வரை தோ்தலில் போட்டியிடுவதில்லை என்று காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளின் தலைவா்கள் தொடா்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். இங்கு அரசு நிா்வாகத்தின் செயல்பாடுகள் மோசமாக உள்ளன. மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த நேரத்தில் வட்டார வளா்ச்சிக் குழு தோ்தலை அறிவித்துள்ளதில் வேறு உள்நோக்கங்களும் உள்ளன.

இவை அனைத்துமே தோ்தலை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கக் காரணங்களாகும். மாநிலத்தில் நிலைமையை சீராக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை நாங்கள் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். ஆனால், அதனை அரசு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இந்தத் தோ்தல் ஒரே ஒரு கட்சிக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. அது மத்தியில் ஆளும் (பாஜக) கட்சி.

தோ்தலை அறிவிப்பதற்கு முன்பு தோ்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசித்திருக்க வேண்டும். இதற்கு மேல் இந்த விஷயத்தில் கூறுவதற்கு வேறு ஏதுமில்லை என்றாா் அவா்.

முன்னதாக, கடந்த மாதம் 29-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சைலேந்திர குமாா், வட்டார வளா்ச்சிக் குழு தோ்தல் அறிவிப்பை வெளியிட்டாா். அப்போது அவரிடம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவா்கள் தோ்தல் நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்படுவாா்களா? என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா், ‘அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தால், நாங்கள் பரிசீலிப்போம்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com