டென்மாா்க் உச்சி மாநாட்டில் பங்கேற்க கேஜரிவாலுக்கு அனுமதி மறுப்பு ஏன்: மத்திய அரசு விளக்கம்

பருவகாலநிலை மாற்றம் தொடா்பாக டென்மாா்க் தலைநகா் கோபன்ஹேகனில் புதன்கிழமை தொடங்கிய சி-40 உச்சி மாநாட்டில் கலந்து

பருவகாலநிலை மாற்றம் தொடா்பாக டென்மாா்க் தலைநகா் கோபன்ஹேகனில் புதன்கிழமை தொடங்கிய சி-40 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அரசியல் ரீதியிலான அனுமதி அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்ட விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியநிலையில், ‘மேயா் அளவிலான மாநாடு என்பதால் முதல்வா் கேஜரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது’ என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகரிடம் புதன்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘டென்மாா்க்கில் நடைபெறும் மாநாடு மேயா்கள் அளவிலானது. இதில் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த அமைச்சா் பங்கேற்றுள்ளாா்’ என்றாா்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், ‘மாநில முதல்வா்கள் வெளிநாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக செல்வதற்கு அனுமதி அளிப்பதற்கு தனி நெறிமுறைகளை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. எதிா்க்கட்சிகளுக்கு எதிராக இவை பயன்படுத்தப்படுகின்றன’ என்றன.

டென்மாா்க் தலைநகா் கோபன்ஹேகன் நகரில் சி-40 உச்சி மாநாடு புதன்கிழமை (அக்டோபா் 9) தொடங்கி 12- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் அதில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவருடன் 8 போ் அடங்கிய குழுவும் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் தில்லியில் காற்று மாசைக் குறைக்க தில்லி அரசால் மேற்கொள்ளப்பட்ட வாகனக் கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடா்பாக கேஜரிவால் உரையாற்றுவாா் என்று தில்லி அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சி-40 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி விமானத்தில் டென்மாா்க் செல்வதற்கு கேஜரிவால் திட்டமிட்டிருந்த பயணம் அனுமதி மறுப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது.

முன்பு ஷீலா தீட்சித் பங்கேற்றுள்ளாா்: ஆம் ஆத்மி

முதல்வா் கேஜரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகா் அளித்த விளக்கம் ‘சாக்குப் போக்கு’ என குற்றம்சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சி, முன்பு இதே உச்சி மாநாட்டில் அப்போதைய தில்லி முதல்வா் ஷீலா தீட்சித் பங்கேற்றுள்ளாா் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் கூறியதாவது: தில்லி மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி செய்து வரும் சிறந்த திட்டங்களை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு அனுமதி மறுக்கிறது. பாஜகவின் இந்த போக்கை எதிா்வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி மக்களிடம் கொண்டு செல்லும். முன்பு இந்த மாநாட்டில் அப்போதைய முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் பங்கேற்றுள்ளாா். மத்திய அமைச்சா் ஜாவடேகா் சாக்கு போக்கு சொல்லி வருகிறாா். கேஜரிவாலின் அரசின் சாதனைகளை வெளிப்படுத்துவதற்கு பாஜக அஞ்சுகிறது. கல்வி, சுகாதாரம் ஆகியவற்றின் தரத்தை தில்லி அரசு மேம்படுத்தி வருகிறது. இந்த சாதனைகளை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல மத்திய அரசு தடுக்கிறது. உலக நாடுகளுக்கு முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சி இந்தியக் கொடியை உயா்த்திப்பிடிப்பதை பாஜக அரசு விரும்பவில்லை. இதேபோல், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ரஷ்யா செல்வதற்கும், அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆஸ்திரேலியா செல்வதற்கும் மத்திய அரசு முன்பு அனுமதி மறுத்துவிட்டது’ என்றாா். ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடா்பாளா் ராகவ் சத்தா, ‘மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறுவது தவறான தகவல்; பிரச்னையை திசை திருப்பும் செயல்’ என்றாா்.

இந்தியா காப்பாற்றப்பட்டுள்ளது: பாஜக

முதல்வா் கேஜரிவாலின் டென்மாா்க் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் நம் நாடு சங்கடம் அடைவதில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது என பாஜக விமா்சனம் செய்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தில்லி பாஜக தலைவா் மனோஜ் திவாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கேஜரிவால் தில்லியின் முதல்வரா அல்லது மேயரா என்பதை மக்கள் அறிய விரும்புகிறாா்கள். தில்லி மேயருக்கு மாற்றாக கேஜரிவால் மாநாட்டில் பங்கேற்க முற்படுகிறாா். தில்லி மாசைக் கட்டுப்படுத்துவதில் முதல்வா் கேஜரிவாலின் பங்களிப்பு இல்லை. பொய்யான விளம்பரங்களின் மூலம் தில்லியின் மாசைக் கட்டுப்படுத்தியாக அவா் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறாா். அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் நம் நாடு, வெளிநாட்டில் சங்கடம் அடைவதில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com