மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5% உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ), ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை 5% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 
மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் தில்லியில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் தில்லியில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்.


மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ), ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை 5% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 
இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட 1.15 கோடி பேர் பலனடைய உள்ளனர்.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவற்றை 5% உயர்த்தும் முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. தீபாவளிப் பண்டிகை, விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.
இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், ஓய்வூதியதாரர்கள் பெற்று வரும் ஓய்வூதியத் தொகை ஆகியவற்றில் 12 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் ஆகியவை தற்போது 17 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படவுள்ளது. அகவிலைப்படி உயர்வு மூலம் 49.93 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்களும், அகவிலை நிவாரணம் உயர்வு மூலம் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.
இது தொடர்பாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அகவிலைப்படியை ஒரே சமயத்தில் 5 சதவீத அளவில் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது அரசுப் பணியாளர்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும்'' என்றார். 
அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் உயர்வு மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.16,000 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படியை 9 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியிருந்தது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு இருமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
உதவித்தொகை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து வெளியேறி இந்தியாவுக்குள் குடிபெயர்ந்த 5,300 குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் உதவித்தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் பிரிவினையின்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த பலர் குடிபெயர்ந்து, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் குடிபெயர்ந்தனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வெளியேறி, ஜம்மு-காஷ்மீரில் வாழ்ந்து வந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆனால், மற்ற மாநிலங்களில் வாழ்ந்து வந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. 
இதையடுத்து, அவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என பிரதமர் மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு அறிவித்தார். இந்நிலையில், மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 
இது தொடர்பாக பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வெளியேறி, தொடக்கத்தில் மற்ற மாநிலங்களில் குடிபெயர்ந்து, பின்னர் ஜம்மு-காஷ்மீருக்குத் திரும்பியவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படாமல் இருந்தது. இந்த வரலாற்றுப் பிழை தற்போது திருத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 5,300 குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com