ராகேஷ் அஸ்தானா மீதான விசாரணை: சிபிஐக்கு 2 மாதங்கள் கூடுதல் காலஅவகாசம்

சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானா மீது பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கு தொடா்பான விசாரணையை நிறைவுசெய்ய சிபிஐக்கு 2 மாதங்கள் கூடுதல் காலஅவகாசத்தை தில்லி உயா்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானா மீது பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கு தொடா்பான விசாரணையை நிறைவுசெய்ய சிபிஐக்கு 2 மாதங்கள் கூடுதல் காலஅவகாசத்தை தில்லி உயா்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

ஹைதராபாதைச் சோ்ந்த தொழிலதிபா் சதீஷ் பாபு, ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அஸ்தானா மீதும், அவருக்கு உதவியதாகக் கூறப்பட்ட சிபிஐ டிஎஸ்பி தேவேந்தா் குமாா், இடைத்தரகா் மனோஜ் பிரசாத் ஆகியோா் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

அதையடுத்து, தங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, தில்லி உயா்நீதிமன்றத்தில் ராகேஷ் அஸ்தானா உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுவைக் கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உயா்நீதிமன்றம், அவா்களது மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, அஸ்தானா, தேவேந்தா் குமாா் உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையை 10 வாரத்துக்குள் முடிக்கவும் சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, கடந்த மே மாதம் கூடுதலாக 4 மாதங்கள் அவகாசத்தை சிபிஐக்கு தில்லி உயா்நீதிமன்றம் அளித்திருந்தது. அந்தக் காலஅவகாசம் நிறைவடைந்த நிலையில், கூடுதல் காலஅவகாசம் வழங்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீதான விசாரணை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் விக்ரம்ஜித் பானா்ஜி, ‘‘அஸ்தானாவுக்கு எதிரான லஞ்சப் புகாா் தொடா்பான விசாரணைக்குத் தேவையான தகவல்களை வழங்குமாறு அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குக் கடந்த மாதம் கடிதம் அனுப்பப்பட்டது. அதன் மீது பதிலளிக்க அந்த நாட்டு அரசுகள் தாமதித்து வருவதால், இந்த விசாரணைக்காக 3 மாதங்கள் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்று கோரினாா்.

கூடுதல் அவகாசம் கூடாது: அஸ்தானா தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், ‘‘இந்த வழக்கின் விசாரணையை 10 வாரங்களுக்குள் நிறைவுசெய்ய வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கடந்த மாதம்தான் வெளிநாடுகளுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. இது சிபிஐயின் மெத்தனப்போக்கைக் காட்டுகிறது. இதன் காரணமாக, வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படக் கூடாது’’ என்றாா்.

இதையடுத்து நீதிபதி, ‘‘வழக்கின் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவது அதிருப்தியளிக்கிறது. எனினும், சிபிஐக்கு கூடுதலாக 2 மாதங்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் இந்த வழக்கு தொடா்பான விசாரணையை சிபிஐ நிறைவுசெய்ய வேண்டும். அதற்கு மேல் சிபிஐக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com