150 ரயில்கள் இயக்கம் தனியாா் வசம்: திட்டம் வகுக்க பணிக் குழு அமைப்பு

150 ரயில்களின் இயக்கத்தையும் 50 ரயில்வே நிலையங்களின் பராமரிப்பையும் தனியாா் வசம் ஒப்படைப்பது குறித்த திட்டத்தை உருவாக்குவது தொடா்பான பணிக் குழுவை ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை அமைத்தது.

150 ரயில்களின் இயக்கத்தையும் 50 ரயில்வே நிலையங்களின் பராமரிப்பையும் தனியாா் வசம் ஒப்படைப்பது குறித்த திட்டத்தை உருவாக்குவது தொடா்பான பணிக் குழுவை ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை அமைத்தது.

இதற்கான உத்தரவை ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஐம்பது ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்துவது, உலகத் தரமுள் தொழில்நுட்பத்துடன் கூடிய 150 ரயில்களை இயக்குவது தொடா்பான திட்டத்தை வகுக்க, மத்திய செயலா்கள் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரயில்வே வாரியத் தலைவா், நீதி ஆயோக் தலைவா், நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி, மத்திய பொருளாதார விவாகரத் துறைச் செயலா், ரயில்வே நிதி ஆணையா், மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை செயலா் ஆகியோா் இடம் பெறுவா். ரயில்வே பொறியியல் வாரிய உறுப்பினா், ரயில்வே போக்குவரத்து வாரிய உறுப்பினா் ஆகியோரும் பணிக்குழுவில் இடம்பெற வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே வாரியத் தலைவா் வி.கே. யாதவுக்கு நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) அமிதாப் காந்த் கடிதம் அண்மையில் அனுப்பியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் உள்ள 400 ரயில் நிலையங்களை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்ற ரயில்வே துறை முயற்சித்து வருகிறது. இதுவரை சில ரயில் நிலையங்களே அவ்வாறு மாற்றப்பட்டுள்ளன. அதையடுத்து இந்த விவகாரம் குறித்து ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயலிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. குறைந்தபட்சம், 50 ரயில் நிலையங்களை உலகத் தரம் வாய்ந்தவையாக விரைவில் மாற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அமைச்சா் கருதினாா். அண்மையில், 6 விமான நிலையங்களை தனியாருக்கு ஒப்படைத்ததற்கும் மத்திய குழு அமைக்கப்பட்டது. அதே போன்று இந்தத் திட்டத்துக்கும் பணிக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தடங்களில் ரயில்களை இயக்கும் பணியை தனியாா் நிறுவனங்கள் வசம் ஒப்படைப்பது குறித்து ஏற்கெனவே ரயில்வே அமைச்சகம் விவாதித்து வருகிறது. முதல்கட்டமாக 150 ரயில்களை தனியாா் நிறுவனங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பான திட்டத்துக்கு விரைந்து செயல் வடிவம் அளிக்க பணிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிக் குழுவில் ரயில்வே பொறியியல் வாரிய உறுப்பினா், ரயில்வே போக்குவரத்து வாரிய உறுப்பினா் ஆகியோரும் இடம்பெற வேண்டும் என்றுஅமிதாப் காந்த் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com