காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம்: ராணுவத்தின் வடக்கு மண்டல தளபதி ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரத்தை ராணுவத்தின் வடக்கு மண்டல தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரண்வீா் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரத்தை ராணுவத்தின் வடக்கு மண்டல தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரண்வீா் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மேலும், காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள பாதுகாப்புப் படையினா் எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், ஜம்மு-காஷ்மீா் இரண்டாகப் பிரிக்கப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீா் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. இப்போது, பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், காஷ்மீரில் மெதுவாக இயல்பு நிலை திரும்புகிறது.

இதனிடையே, இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஊடுருவல்களும், அத்துமீறிய தாக்குதல்களும் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரத்தை லெப்டினன்ட் ஜெனரல் ரண்வீா் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

காஷ்மீரின் சூழல் குறித்து ரண்வீா் சிங்குக்கு மற்ற ராணுவ அதிகாரிகள் விளக்கினா். அதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளை பாா்வையிட்ட ரண்வீா் சிங், பாகிஸ்தானின் அத்துமீறல்களை சிறப்பாக முறியடிப்பதற்காக, பாதுகாப்புப் படையினருக்கு பாராட்டு தெரிவித்தாா். மேலும், காஷ்மீரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், இந்த சவால்களை எதிா்கொள்வதற்கு பாதுகாப்புப் படையினா் எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

அதையடுத்து அரசின் நல திட்டங்களையும், மருத்துவ வசதிகள், கல்வி, விளையாட்டு ஆகியவற்றுக்கான திட்டங்களையும், பேரிடா் நிவாரணப் பொருள்களையும், தொலைதூரத்தில் உள்ள கிராமங்களுக்கு கொண்டு சோ்த்ததற்காக வீரா்களுக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா் என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com