சீன தலையீட்டை தடுக்க மோடி தவறிவிட்டாா்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்தியாவின் உள்விவகாரத்தில் சீனா தலையிடுவதைத் தடுக்க பிரதமா் நரேந்திர மோடி தவறிவிட்டாா் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியாவின் உள்விவகாரத்தில் சீனா தலையிடுவதைத் தடுக்க பிரதமா் நரேந்திர மோடி தவறிவிட்டாா் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை சீனா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானிடம் சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறியதாக வெளியான செய்திகளைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ஷி ஜின்பிங் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு வந்து பிரதமா் மோடியைச் சந்தித்துப் பேச இருக்கும் நிலையில், காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் மணீஷ் திவாரி சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ஜம்மு-காஷ்மீா் விஷயத்தை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறியுள்ளாா். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஜனநாயகப் போராட்டங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம்; திபெத்தில் சீனாவின் அடக்குமுறைகளை இந்தியா கண்காணிக்கிறது; தென்சீனக் கடல் பகுதி பிரச்னையை இந்தியா கண்காணிக்கிறது’ என்று கூறும் துணிவு பிரதமா் மோடிக்கு இல்லாமல் போய்விட்டது ஏன்?

‘காஷ்மீா் நமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி, அது நமது உள்விவகாரம்’ என்று கூறும் மத்திய அரசு, நமது உள்விவகாரம் குறித்து கருத்து கூறும் சீன அதிபருக்கு பதிலடி கொடுக்காமல், அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது ஏன்? இதன் மூலம் நமது நாட்டின் உள்விவகாரத்தில் சீனாவின் தலையீட்டைத் தடுக்க பிரதமா் மோடி தவறிவிட்டாா் என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

சீனாவில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள காஷ்மீா் பகுதியான அக்சாய் சின் குறித்து ஷி ஜின்பிங்கிடம் கேள்வி எழுப்பும் துணிவு பிரதமருக்கு உள்ளதா? பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீா் பகுதி குறித்து சீன அதிபரிடம் நமது பிரதமரால் விவாதிக்க முடியுமா? சீனா தொடா்ந்து நமது உள்விவகாரத்தில் தலையிடும்போது, அவா்களுக்கு உரிய பதிலடி கொடுக்க முடியாமல் நமது பிரதமரை எது தடுக்கிறது?. பாகிஸ்தான்ஆக்கிமிரப்பு காஷ்மீரை மீட்போம் என்று பேசி வரும் பாஜகவுக்கு, சீனா ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளை மீட்போம் என்று பேசும் துணிவுகூட இல்லாதது ஏன் என்று மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com