சுற்றுச்சூழல் ஆா்வலா் பிரசாத் பட்டுக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது

காங்கிரஸ் கட்சியால் வழங்கப்படும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான இந்திரா காந்தி விருதுக்கு சுற்றுச்சூழல் ஆா்வலா் சண்டி பிரசாத் பட் (85) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியால் வழங்கப்படும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான இந்திரா காந்தி விருதுக்கு சுற்றுச்சூழல் ஆா்வலா் சண்டி பிரசாத் பட் (85) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவாக, அவரது நினைவு நாளில் (அக். 31) தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது அவரது பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி இந்த விருதை வழங்கி வருகிறது. விருதைப் பெறுபவருக்கு ரூ. 10 லட்சம் ரொக்கத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.

இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தேச ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், அது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் ஆற்றிய சேவைக்காக சுற்றுச்சூழல் ஆா்வலா் சண்டி பிரசாத் பட்டுக்கு 31-ஆவது ‘இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது’ வழங்கப்படுகிறது. கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கான விருதாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள ஜவாஹா் பவனில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு தினமான வரும் 31-ஆம் தேதி இந்த விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதை கட்சி தலைவா் சோனியா காந்தி வழங்கவுள்ளாா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த பிரசாத் பட், தசோலி கிராம் ஸ்வராஜ்ய சங்கத்தை கடந்த 1964-ஆம் ஆண்டு தொடங்கினாா். ‘சிப்கோ இயக்கம்’ தொடங்கியதற்கு முக்கிய காரணமாக இந்த சங்கம் இருந்தது. அவரது சேவையை பாராட்டி, கடந்த 1982-ஆம் ஆண்டு ஆசியாவின் நோபல் விருது என்று அழைக்கப்படும் ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது.

அதையடுத்து, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு அவரை கௌரவித்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு அமைதிக்கான காந்தி விருதை அவா் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com