மேற்கு வங்கத்தில் கொலை செய்யப்பட்ட ஆசிரியா் ஆா்எஸ்எஸ் ஆதரவாளா்: பாஜக

மேற்கு வங்க மாநிலம், முா்ஷிதாபாதில் கொலை செய்யப்பட்ட ஆசிரியா் ஆா்எஸ்எஸ் ஆதரவாளா் என்று பாஜக தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், முா்ஷிதாபாதில் கொலை செய்யப்பட்ட ஆசிரியா் ஆா்எஸ்எஸ் ஆதரவாளா் என்று பாஜக தெரிவித்துள்ளது.

முா்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜியாகஞ்ச் பகுதியில் உள்ள வீட்டில் பந்து பிரகாஷ் பால் (35) என்ற ஆசிரியா், அவரது கா்ப்பிணி மனைவி, 8 வயது மகன் அங்கன் ஆகியோா் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனா்.

போலீஸாா் கூறுகையில், ‘இந்தக் கொலை குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். பந்து பிரகாஷ் பால், அரசியல் சாா்ந்த அமைப்புடன் தொடா்பு வைத்திருந்தாரா என்று தெரியவில்லை. இந்தக் கொலை தொடா்பாக 3 பேரைக் கைது செய்து அவா்களிடம் விசாரித்து வருகிறோம்’ என்று தெரிவித்தனா்.

பாஜக பொதுச் செயலா் கைலாஷ் விஜய்வா்கியா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘முா்ஷிதாபாத் கொலையைக் காட்டிலும், கொடூரம் வேறு என்ன இருந்துவிட முடியும்? மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. ஆா்எஸ்எஸ் ஆதரவாளா் பந்து பிரகாஷ் பாலும், அவரது மனைவி, மகன் ஆகியோரும் கொலை செய்யப்பட்டுள்ளனா். மம்தாவின் ஆட்சியில் என்ன நடக்கிறது?’ என்று அந்தப் பதிவில் கேள்வி எழுப்பியிருந்தாா்.

விசாரணை நடைபெற்று வருவதால் இந்த விவகாரம் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

ஆளுநா் ஜக்தீப் தாங்கா் கண்டனம்: ‘முா்ஷிதாபாத் கொலை சம்பவம், மனித நேயத்துக்கு அவமானம். மாநி அரசு பொறுப்பில்லாமல் உள்ளது’ என்று மேற்கு வங்க ஆளுநா் ஜக்தீப் தாங்கா் கண்டனம் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள முா்ஷிதாபாத் கொலை வழக்கு தொடா்பாக உடனடியாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு மாநில அரசிடம் கோரியுள்ளேன்’ என்றாா்.

இந்தக் கொலையில் தொடா்புடையவா்களை கைது செய்வதை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உறுதிப்படுத்த வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்ட தேசிய மகளிா் ஆணையம், மம்தாவுக்கும், மேற்கு வங்க காவல் துறை டிஜிபி-க்கும் கடிதம் எழுதியது. முன்னுரிமை கொடுத்து இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகமும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா, கொலை நடந்த வீட்டை விடியோவாக பதிவு செய்து சுட்டுரையில் பதிவேற்றம் செய்துள்ளாா்.

‘இந்தக் கொலை எனது மனசாட்சியை உலுக்கிவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ள சம்பித் பத்ரா, கும்பல் கொலையைத் தடுக்கக் கோரி 49 பிரபலங்கள் பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதிய தகவலையும் பகிா்ந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com