5 நவோதய பள்ளிகள், 13 கேந்திரிய வித்யாலயங்களை தொடக்கி வைத்தார் மத்திய அமைச்சர் போக்ரியால்

நாடு முழுவதும் 5 ஜவாஹர் நவோதய பள்ளிகள், 13 கேந்திரிய வித்யாலயங்கள் ஆகியவற்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தில்லியிலிருந்து காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை
கோப்புப் படம்
கோப்புப் படம்

நாடு முழுவதும் 5 ஜவாஹர் நவோதய பள்ளிகள், 13 கேந்திரிய வித்யாலயங்கள் ஆகியவற்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தில்லியிலிருந்து காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். 
மேலும், நேஷனல் நவோதயா லீடர்ஷிப் இன்ஸ்டிடியூட்டையும் தொடக்கி வைத்த போக்ரியால், புதிதாக கட்டப்பட இருக்கும் 9 ஜவாஹர் நவோதய பள்ளிகளுக்கும், 13 கேந்திரிய வித்யாலயங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். 
புதிய நவோதய பள்ளிகளில், உத்தரப் பிரதேசத்தின் சீதாப்பூர் மற்றும் காசிராம் நகரில் தலா ஒரு பள்ளியும், குஜராத் மாநிலத்தின் நவசாரி மற்றும் தாங் பகுதிகளில் தலா ஒரு பள்ளியும், ஒடிஸாவின் மல்காங்கிரி பகுதியில் ஒரு பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளது. 
நேஷனல் நவோதயா லீடர்ஷிப் இன்ஸ்டிடியூட், ஒடிஸாவின் புரி நகரில் தொடங்கப்பட்டுள்ளது. 
13 கேந்திரிய வித்யாலயங்களில், அஸ்ஸாமில் 3, குஜராத்தில் 2, மத்தியப் பிரதேசத்தில் 2, பிகார், கர்நாடகம், ஒடிஸா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தலா ஒன்றும் திறக்கப்பட்டுள்ளன. 
இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் போக்ரியால் பேசியதாவது: 
அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய நவோதய பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயங்கள், அடுத்த 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். சுமார் ரூ.417 கோடி செலவில் அவை கட்டி முடிக்கப்படவுள்ளன. ஜவாஹர் நவோதய பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் பலர், இந்திய குடிமைப் பணி, மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருவதே, அந்தப் பள்ளிகளின் தரத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. 
நவோதய பள்ளிகளில் பயின்றவர்களில் கடந்த ஆண்டு 4,451 மாணவர்கள் ஜேஇஇ மெயின்ஸ் தேர்விலும், 966 மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்விலும், 12,654 மாணவர்கள் நீட் தேர்விலும் தேர்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன், கடந்த 3 ஆண்டுகளில் 12 மாணவர்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பேசினார். 
ஊரகப் பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கும் வகையில் நாட்டில் 661 ஜவாஹர் நவோதய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 
இருபால் மாணவர்களுக்கான பள்ளிகள், உண்டு-உறைவிடப் பள்ளிகளாகவும் செயல்பட்டுவரும் நவோதய பள்ளிகளை, நவோதய வித்யாலய சமிதி தனது 8 மண்டல அலுவலகங்கள் மூலம் நிர்வகித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com