ஃபோர்டிஸ் நிறுவன முன்னாள் மேம்பாட்டாளர் உள்பட 5 பேரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, ஃபோர்டிஸ் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் மேம்பாட்டாளர் மல்வீந்தர் சிங் வெள்ளிக்கிழமை கைது
தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட சிவிந்தர் சிங், மல்வீந்தர் சிங்.
தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட சிவிந்தர் சிங், மல்வீந்தர் சிங்.


மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, ஃபோர்டிஸ் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் மேம்பாட்டாளர் மல்வீந்தர் சிங் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, மல்வீந்தர் சிங் உள்பட இந்த வழக்கில் கைதான ஐந்து பேரை நான்கு நாள்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாருக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. 
ஃபோர்டிஸ் நிறுவனங்களின் தலைவராக சிவிந்தர் சிங் பதவி வகித்த போது, நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக, ரெலிகேர் ஃபின்வெஸ்ட் லிமிடெட் (ஆர்எஃப்எல்) என்ற நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். ஆனால், அந்த கடன் தொகையை அவர் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், இதனால், அந்த நிறுவனத்திற்கு இழப்பீடு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. ஃபோர்டிஸ் நிறுவனத்தின் தலைமை மாறிய பிறகு, கடனாகப் பெறப்பட்ட தொகை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் முதலீடு செய்யப்படாததை ரெலிகேர் ஃபின்வெஸ்ட் நிறுவனம் கண்டறிந்தது. அதையடுத்து, சிவிந்தர் சிங், மல்வீந்தர் சிங், அவரது சகோதரர் சிவிந்தர் மோகன் சிங், ரெலிகர் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ஆர்இஎல்) நிறுவனத்தின் தலைவர் சுனில் கோத்வானி (58), கவி அரோரா ( 48), அனில் சாக்ஷேனா ஆகியோருக்கு எதிராக ஆர்எஃப்எல் நிறுவனத்தைச் சேர்ந்த மன்பிரீத் சிங் சூரி புகார் அளித்திருந்தார். 
 ஆர்எஃப்எல் நிறுவனம், ஆர்இஎல் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். சிவிந்தர் மோகன் சிங், அவரது மூத்த சகோதரர் மல்வீந்தர் சிங் ஆகியோர் இந்த நிறுவனத்தின் முன்னாள் மேம்பாட்டாளர்கள் ஆவர். இந்நிலையில், போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில், இவர்கள் ஆர்எஃப்எல் நிறுவனத்திற்கான கடன் பணத்தை நிதி ஆதரவு இல்லாத தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்து, ஆர்எஃப்எல் நிறுவனத்தை நிதிச் சிக்கலில் விட்டு விட்டனர். கடன் பெற்ற நிறுவனங்கள் வேண்டு மென்றே பணத்தை திருப்பிச் செலுத்தாததால் ஆர்எஃப்எல் நிறுவனத்திற்கு ரூ.2,397 கோடி நஷ்டம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பேரில் தில்லி காவல் துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு பிரிவு போலீஸாரால் சிவிந்தர் சிங் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டர். அவருடன் சேர்த்து கவி அரோரா, சுனில் கோத்வானி, அனில் சக்úஸனா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மல்வீந்தர் சிங் தலைமறைவாகிவிட்டதால், அவருக்கு எதிராக தேடப்படும் நபருக்கான உத்தரவை போலீஸார் பிறப்பத்திருந்தனர். மேலும், அவரை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை அவர் லூதியானாவில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் தில்லிக்கு கொண்டு வரப்பட்டதாக பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஓ.பி. மிஸ்ரா தெரிவித்தார்.
நீதிமன்றம் உத்தரவு: கைதான ஐந்து பேரும் தில்லி தலைமைப் பெருநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி தீபக் ஷெராவத் முன் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களை 6 நாள்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அப்போது, ஐந்து பேரையும் நான்கு நாள்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு தில்லி காவல் துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாருக்கு அனுமதி அளித்து நீதிபதி தீபக் ஷெராவத் உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றத்தில் முறையீடு: இதனிடையே, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மல்வீந்தர் சிங் தரப்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்த உத்தரவை ஒத்திவைத்தார். முன்னதாக, மல்வீந்தர் சிங் தாக்கல் செய்திருந்த மனுவில், தனக்கு எதிரான மோசடிப் புகார்கள் குறித்து பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் வரும் தீவிர மோசடிகள் விசாரணை அலுவலகம் (எஸ்எஃப்ஐஓ) மட்டுமே விசாரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையின் போது மல்வீந்தர் சிங் தரப்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, பொருளாதாரக் குற்றப் பிரிவு பதிவு செய்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக போலீஸார் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு ரெலிகேர் ஃபின்வெஸ்ட் நிறுவனம் மற்றும் போலீஸ் தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்து வாதங்கள் முன்வைக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com