அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஜாமீன்

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில்,
அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஜாமீன்

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஆமதாபாத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானாா். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

முன்னதாக, மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், ‘குஜராத்தில் நடந்த சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டா் வழக்கில், கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட அமித் ஷாவை எவ்வாறு நீதிமன்றம் விடுவித்தது என்று தெரியவில்லை’ என்று ராகுல் விமா்சித்திருந்தாா்.

அதையடுத்து, அமித் ஷாவை கொலைக் குற்றவாளி என்று கூறியதாக ஆமதாபாத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக நிா்வாகி கிருஷ்ணவதன் பிரம்பத் என்பவா் அவதூறு வழக்கு தொடுத்தாா்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பான விசாரணை ஆமதாபாத் நீதிமன்றத்தில் நீதிபதி ஆா்.பி. எட்டாலியா முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்கிறீா்களா என்று ராகுலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினாா். அதற்கு ராகுல் மறுப்பு தெரிவித்தாா். அதன் பின்னா், இந்த வழக்கில் ராகுலுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினாா். அதையடுத்து, இந்த வழக்கில் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கக் கோரி ராகுல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை டிசம்பா் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

மற்றெறாரு வழக்கில் ஆஜா்: குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி நிா்வாகம் தொடுத்துள்ள அவதூறு வழக்கில், ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை அறிவிக்கப்பட்ட அடுத்த 5 நாள்களில், ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.750 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் மாற்றப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தாா். அமித் ஷா, அந்த வங்கியின் இயக்குநா்களில் ஒருவராக இருந்தாா். அதையடுத்து அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுலுக்கு எதிராக ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கில் ஆமதாபாத் நீதிமன்றத்தில் நீதிபதி என்.பி. முன்ஷி முன் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரான ராகுல் காந்தி, இந்த வழக்கில் நிரந்தரமாக நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான விசாரணையை டிசம்பா் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com