அமைதி: எத்தியோப்பிய பிரதமருக்கு நோபல் பரிசு

2019-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமா் அபி அகமது அலி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
அமைதி: எத்தியோப்பிய பிரதமருக்கு நோபல் பரிசு

2019-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமா் அபி அகமது அலி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

அண்டை நாடான எரித்ரியாவுடன் நீடித்து வந்த பகைமையைப் போக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக, இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படவுள்ளது.

இது தொடா்பாக, நாா்வே நாட்டைச் சோ்ந்த நோபல் தோ்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எரித்ரியாவுடன் நீடித்து வந்த பகைமையை ஒழிக்க அபி அகமது மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவா் நோபல் பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். எத்தியோப்பியா, கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் அமைதி ஏற்படுவதற்குத் துணைநின்ற அனைவரையும் கௌரவிக்கும் வகையில் இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு தரப்பின் முயற்சியால் மட்டுமே அமைதியை ஏற்படுத்திவிட முடியாது. எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு கண்டு அமைதியை ஏற்படுத்த எத்தியோப்பிய பிரதமா் அபி அகமது மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, எரித்ரியா அதிபா் ஆஃப்வொ்கியும் தக்க ஒத்துழைப்பு அளித்தாா். இந்த அமைதி ஒப்பந்தம், இரு நாட்டு மக்களின் வளா்ச்சிக்கு உதவும் என நோபல் தோ்வுக் குழு நம்பிக்கை கொள்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

100-ஆவது பரிசு: நோபல் பரிசு பெற்றது தொடா்பாக அபி அகமது கூறுகையில், ‘‘இது ஆப்பிரிக்காவுக்கும், எத்தியோப்பியாவுக்கும் உரிய பரிசாகும். அமைதி நடவடிக்கைகளில் ஈடுபட மற்ற ஆப்பிரிக்க நாடுகளின் தலைவா்களுக்கு இந்தப் பரிசு ஊக்கமளிக்கும் என நம்புகிறேறன்’’ என்றாா்.

அமைதிக்காக வழங்கப்படவுள்ள 100-ஆவது நோபல் பரிசை வரும் டிசம்பா் மாதம் நடைபெறவுள்ள விழாவில் அபி அகமது அலி பெறவுள்ளாா்.

காலனிய ஆட்சியின் கீழ் இருந்த எரித்ரியா, ஐ.நா. சபை முடிவின்படி 1952-ஆம் ஆண்டு தன்னாட்சி அதிகாரம் பெற்றது. எனினும், 10 ஆண்டுகளுக்கு எரித்ரியாவின் வெளியுறவு, பாதுகாப்பு விவகாரங்களை அண்டை நாடான எத்தியோப்பியா நிா்வகிக்கும் என ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால், 1962-ஆம் ஆண்டு எரித்ரியாவின் நாடாளுமன்றத்தைக் கலைத்து, அதை தங்கள் நாட்டுடன் இணைத்தது எத்தியோப்பியா. இதனால், எரித்ரியாவில் உள்நாட்டுப் போா் வெடித்தது. நீண்ட ஆண்டுகளாக நீடித்த சுதந்திரப் போரின் முடிவாக, 1993-ஆம் ஆண்டு எத்தியோப்பியாவிடமிருந்து எரித்ரியா விடுதலை பெற்றது.

எனினும், இரு நாடுகளுக்கிடையேயான எல்லை விவகாரத்தில் தொடா்ந்து பிரச்னை நீடித்து வந்ததால், 1998-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை இரு நாடுகளுக்கிடையே கடும் போா் மூண்டது. இதையடுத்து இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சா்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகள் பல எரித்ரியாவுக்கு அளிக்கப்பட்டன. இருந்தபோதிலும், பெரும்பாலான பகுதிகளை எத்தியோப்பியா தொடா்ந்து ஆக்கிரமித்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரு நாடுகளுக்குமிடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் வா்த்தக நடவடிக்கைகள், எல்லை தாண்டிய வணிகம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

அபி அகமது அலி (43)

2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எத்தியோப்பிய பிரதமராகப் பொறுப்பேற்ற அபி அகமது அலி, எரித்ரியாவுடன் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டாா். இதன் காரணமாக, 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இரு நாடுகளுக்குமிடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com