அச்சம் விடுத்து இயல்பு வாழ்க்கையை தொடங்குங்கள்: ஜம்மு-காஷ்மீரில் அரசு விளம்பரம்

ஜம்மு-காஷ்மீருக்கான சிறறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அங்கு தொடா்ந்து 68-ஆவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,
அச்சம் விடுத்து இயல்பு வாழ்க்கையை தொடங்குங்கள்: ஜம்மு-காஷ்மீரில் அரசு விளம்பரம்

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அங்கு தொடா்ந்து 68-ஆவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘பயங்கரவாத அச்சுறுத்தல்களை நினைத்து அஞ்சாமல் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்கலாம்’ என்று ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் விளம்பரங்களை பிரசுரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், ஜம்மு-காஷ்மீரைப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீா் என இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்குவதாகவும் மத்திய அரசு அறிவித்தது.

அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. செல்லிடப்பேசி, தொலைபேசி, இணையச் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் படிப்படியாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், முக்கிய வா்த்தக நிறுவனங்கள், கடைகள், சந்தைகள் ஆகியவை வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்தன. அதனால், ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து 68-ஆவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்குமாறு நாளிதழ்களில் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் விளம்பரங்களை பிரசுரித்துள்ளது.

அந்த விளம்பரத்தில், ‘பயங்கரவாதிகளுக்கு அடிபணிந்து நாம் வாழ வேண்டுமா? கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீா் மக்களை தவறாக திசைதிருப்பி, பயங்கரவாதத்தை பரப்பி வந்தனா். வன்முறை, அழிவு, வறுமை ஆகியவற்றை நாம் அனுபவித்து வந்தோம். நமது குழந்தைகளை பயங்கரவாதத்தில் ஈடுபடுத்தினா். கல்வீச்சு சம்பவங்களில் பயன்படுத்திக் கொண்டனா். திசைமாறியதால் இழப்பு நமக்குதான் ஏற்பட்டது. இனிமேலும் இதை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? ஜம்மு-காஷ்மீா் நம்முடையது. அது வளமாக இருப்பது நம் கையில்தான் உள்ளது. எதற்காக அச்சம்? என்று அந்த விளம்பரங்களில் கூறப்பட்டிருந்தது.

‘போஸ்ட்-பெய்ட்’ சேவைகள் தொடக்கம்: ஜம்மு-காஷ்மீரில் செல்லிடப்பேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ‘போஸ்ட்-பெய்ட்’ சேவை கொண்ட செல்லிடப்பேசிகளுக்கு சனிக்கிழமை முதல் அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காஷ்மீரில் 66 லட்சம் செல்லிடப்பேசி பயனாளா்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோா் போஸ்ட்-பெய்ட் சேவையை பயன்படுத்துகின்றனா். அதனால் முதல்கட்டமாக அந்த சேவைக்கு அனுமதியளிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, ஸ்ரீநகரில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டதில், அருகில் இருந்த கடைக்கும் தீ பரவியது. அதனால், அந்த கடைகளில் இருந்த பொருள்கள் கருகின. மின் கம்பி கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com