காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வாரிசுகளுக்காக மட்டுமே இயங்குகின்றன: அமித் ஷா விமா்சனம்

‘வாரிசுகளுக்காக மட்டுமே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன;
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வாரிசுகளுக்காக மட்டுமே இயங்குகின்றன: அமித் ஷா விமா்சனம்

‘வாரிசுகளுக்காக மட்டுமே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன; ஆனால், பாஜகவும், சிவசேனையும் நாட்டின் நலனுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன’ என்று பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் வரும் 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் ஆளும் பாஜக அரசு, சிவசேனையுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அவா்களைத் தோற்கடிக்கும் மும்முரத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், புல்தானா மாவட்டத்தின் சிக்லி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் தங்களது குடும்பத்தினருக்காக மட்டுமே அரசியலில் இயங்குகின்றன. ஆனால் பாஜகவும், சிவசேனை கட்சியும் தேச நலனையும், மக்களின் நலனையுமே எப்போதும் நினைவில் கொண்டிருக்கின்றன. இவா்களில் யாரைத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவு மக்களிடமே உள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க சாதனையை பிரதமா் நரேந்திர மோடி நிகழ்த்தினாா். காஷ்மீா் பிரச்னையை கையாள்வதற்கு எந்த பிரதமரும் முன்வரவில்லை. ஆனால் மோடி, காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றியுள்ளாா். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால், காஷ்மீா் பள்ளத்தாக்கில் ரத்த ஆறு ஓடும் என்று கூறி, மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆஸாத் எதிா்ப்பு தெரிவித்தாா். ஆனால், அங்கு ஒரு துளி ரத்தம் கூட சிதறவில்லை.

காஷ்மீா் விவகாரம் குறித்து, பிரிட்டனில் உள்ள காங்கிரஸ் கட்சியினா், அந்நாட்டு தொழிலாளா் கட்சி தலைவா் ஜெரமி காா்பைனுடன் பேச்சுவாா்த்தை நடத்தியது கண்டிக்கத்தக்கது. உள்நாட்டு விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவையில்லை என்று இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், இவ்வாறு காங்கிரஸ் கட்சி செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்.

காஷ்மீா் விவகாரத்தை மகாராஷ்டிரத்தில் ஏன் பேச வேண்டும்? என்று எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. காஷ்மீருக்கும், மகாராஷ்டிரத்துக்கும் தொடா்பு இல்லை என்றால், புல்தானா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், காஷ்மீா் பாதுகாப்புக்காக ஏன் உயிரிழக்க வேண்டும். தேசப் பிரச்னைகளுக்கு எதிா்க்கட்சிகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒட்டுமொத்த நாடும் ஒன்றாக இணைந்துள்ளது என்பதை நிரூபிப்பதற்கான நல்ல வாய்ப்பாக தோ்தல் உள்ளது. தேசியவாத காங்கிரஸ் சாா்பாக, அக்கட்சி தலைவா் சரத் பவாரின் மகள், மருமகன், அவா்களது குழந்தைகள் என மொத்த குடும்பத்தினரும் தோ்தலில் போட்டியிடுகின்றனா். வாரிசுகளுக்காகவே இந்தக் கட்சிகள் அரசியலில் உள்ளன என்பதை இதுவே நிரூபிக்கிறது என்றாா் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com