தேசத்தின் பேரழகான ஊர்...: மாமல்லபுரம் மாண்பை தமிழில் சுட்டுரைத்த மோடி!

நாட்டின் பேரழகான இடமாகவும், உயிர்த்துடிப்பு மிக்க ஊராகவும் மாமல்லபுரம் விளங்குகிறது என்று பிரதமர் மோடி தமிழில் சுட்டுரைப் பதிவிட்டுள்ளார்.
தேசத்தின் பேரழகான ஊர்...: மாமல்லபுரம் மாண்பை தமிழில் சுட்டுரைத்த மோடி!


நாட்டின் பேரழகான இடமாகவும், உயிர்த்துடிப்பு மிக்க ஊராகவும் மாமல்லபுரம் விளங்குகிறது என்று பிரதமர் மோடி தமிழில் சுட்டுரைப் பதிவிட்டுள்ளார்.
சென்னைக்கு பிரதமர் மோடி வந்திறங்கியதில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பதிவுகளை சுட்டுரையில் வெளியிட்டுள்ளார். அவற்றில், 10-க்கும் மேற்பட்டவை தமிழிலும், சில சீன மொழியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழகத்துக்கு வந்தது மகிழ்ச்சி என முதல் பதிவை வெளியிட்டார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து மாமல்லபுரத்துக்குப் புகழாரம் சூட்டி அவர் வெளியிட்ட தமிழ் சுட்டுரைப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று. உயிர்த்துடிப்பு மிக்க ஊர். வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம்.

தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. பாரம்பரியத் தலங்களுள் ஒன்றான இந்தக் கவின் மிகு இடத்தை அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப் பார்த்து நேரத்தை செலவிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
மாமல்லபுரத்தில் காண வேண்டிய பிரம்மாண்டமான இடங்களுள் ஒன்று அர்ச்சுனன் தபசு. இது மகாபாரதக் கால வாழ்க்கையை உயிர்ப்பித்துக் காட்டுகிறது. பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பை, குறிப்பாக இயற்கையையும், விலங்குகளையும் அர்ச்சுனன் தபசு காட்சிப்படுத்துகிறது.
அதிபர் ஷி ஜின்பிங்கும் நானும் அதி அற்புதமான ஐவர் ரதங்களைக் கண்டுகளித்தோம்.

ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று அந்தப் பதிவுகளில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மோடி-ஷி ஜின்பிங் சந்திப்பு துளிகள்....
    சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையினால், சென்னை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தது.
    கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை ஆகியவற்றில் காலை 9 மணி முதலே போலீஸார் சாலைகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்
    ராஜீவ் காந்தி சாலைகளில் உணவகங்கள் மூடப்பட்டதால், மென்பொருள் பொறியாளர்களுக்கு சாப்பாடு கிடைப்பதில் இடர்பாடு ஏற்பட்டது.
    அதிமுக, பாரதிய ஜனதா கட்சி சார்பில் நண்பகல் 12  மணி முதலே பல்வேறு இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    சீன அதிபர் பயன்படுத்திய அதிநவீன ஹாங்கி காரை பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் திரண்டு நின்றதைக் காண முடிந்தது.
    தொடர் பணியின் காரணமாக காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
    கிழக்கு கடற்கரைச் சாலையில் சில பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது.
    கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் பொழுது போக்கு பூங்காக்களும் பூட்டப்பட்டிருந்தன.
    சீன அதிபர் வரும்வரை கிழக்கு கடற்கரைச் சாலையிலும், ராஜீவ் காந்தி சாலையிலும் அரசு ஊழியர்கள் அழகுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே (ஓர்க் ப்ரம் ஹோம்) பணி செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com