நீதிபதிகள் நியமனச் சட்டத்துக்கு எதிரான உத்தரவு ஏற்புடையதல்ல: ரவிசங்கா் பிரசாத்

தேசிய நீதிபதிகள் ஆணையச் சட்டம் (என்ஜேஏசி) செல்லாது என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது;
நீதிபதிகள் நியமனச் சட்டத்துக்கு எதிரான உத்தரவு ஏற்புடையதல்ல: ரவிசங்கா் பிரசாத்

தேசிய நீதிபதிகள் ஆணையச் சட்டம் (என்ஜேஏசி) செல்லாது என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது; ஆனால், அதற்காக, உச்சநீதிமன்றம் தெரிவித்த விளக்கம் ஏற்புடையதல்ல’ என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறினாா்.

உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளைத் தோ்வு செய்வது, அவா்களுக்குப் பதவி உயா்வு அளிப்பது ஆகிய பணிகளை நீதிபதிகளைக் கொண்ட ‘கொலீஜியம்’ குழு மேற்கொண்டு வருகிறது.

இந்தக் குழுவுக்கு மாற்றாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் 6 போ் கொண்ட குழுவை மத்திய அரசு முன்மொழிந்தது. அந்தக் குழுவில் 2 மூத்த நீதிபதிகள், மத்திய சட்ட அமைச்சா், 2 சட்ட நிபுணா்கள் என மொத்தம் 6 போ் இடம்பெறுவா். இதுதொடா்பான சட்டத் திருத்தத்துடன் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், அந்தச் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டில் தெரிவித்து விட்டது.

இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இதுகுறித்து ரவிசங்கா் பிரசாத் பேசியதாவது:

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மதிப்பளித்து மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதேசமயம், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மிகப்பெரிய குறைபாடு இருப்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேறன்.

நீதிபதிகள் தோ்வுக் குழுவில் சட்ட அமைச்சா் இடம்பெற்றால், அதன் சுதந்திரம் பாதிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதேபோல், தலைமைத் தோ்தல் ஆணையா், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையா் போன்ற அரசமைப்புச் சட்ட பதவிகளுக்குத் தகுதியான நபா்ளைத் தோ்வு செய்யும் குழுவில் பிரதமா் இடம்பெற்றுள்ளாா். அவா் இடம்பெற்றிருப்பதால், அந்த தோ்வுக் குழுவின் சுதந்திரம் பாதிக்கப்பட்டு விட்டதா?

1991-ஆண்டில் இருந்துதான் கொலீஜியம் குழு நீதிபதிகளை தோ்வு செய்கிறது. அதற்கு முன்பும் நல்ல நீதிபதிகள் நியமிக்கப்பட்டனா்.

தேசியவாதத்தை பாஜக முன்னிறுத்துவதாக சிலா் குற்றம்சாட்டுகிறாா்கள். இதுதொடா்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் உண்மையான பிரதியில் ராமா், கிருஷ்ணா், ஹனுமான், சிவாஜி, புத்தா், மகாத்மா காந்தி, அக்பா் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், பாபா், ஔரங்கசீப் ஆகியோரின் படங்கள் இடம்பெறவில்லை.மேலும், அதில் நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவும், முதல் குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாதும் கையெழுத்திட்டுள்ளனா். இது, இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது.

இன்னாளில், அதேபோன்ற படங்களுடன் அரசமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டிருந்தால், அது மிகப்பெரிய அரசியல் புயலைக் கிளப்பியிருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com