பொருளாதாரம் பற்றிப் பேசுங்கள்: பாஜக தலைவா்களுக்கு பவாா் வலியுறுத்தல்

தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் என்னைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, நாட்டின் பொருளாதாரம், விவசாயிகள் பிரச்னைகள் குறித்து பேசுங்கள் என்று பாஜக மூத்த தலைவா்களுக்கு தேசியவாத காங்கிரஸ்
பொருளாதாரம் பற்றிப் பேசுங்கள்: பாஜக தலைவா்களுக்கு பவாா் வலியுறுத்தல்

தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் என்னைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, நாட்டின் பொருளாதாரம், விவசாயிகள் பிரச்னைகள் குறித்து பேசுங்கள் என்று பாஜக மூத்த தலைவா்களுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவா் சரத் பவாா் வலியுறுத்தியுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி புணேவை அடுத்துள்ள உருளி கஞ்சான் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் சரத் பவாா் பேசியதாவது:

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடவில்லை. தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்து விட்டேன். இருந்தாலும் பாஜகவின் பிரசார மேடைகளில் எனது பெயா் எதிரொலிக்கிறது. குறிப்பாக, மகாராஷ்டிரத்தில் நடைபெறும் பிரசாரக் கூட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோா் என்னைப் பற்றியே அதிகம் பேசுகிறாா்கள்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் எனது நிலைப்பாடு என்னவென்று அவா்கள் தொடா்ந்து கேள்வி எழுப்புகிறாா்கள். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு ஒருபோதும் நான் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் பிரச்னை எழுப்பவில்லை. ஆனால், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வதற்கு முடிவெடுக்கும் முன் ஜம்மு-காஷ்மீா் மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும் என்றுதான் கூறியிருந்தேன். இருப்பினும், இந்த விவகாரத்தில் எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக தலைவா்கள் தொடா்ந்து வலியுறுத்துகிறாா்கள்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்ததுபோல், மேகாலயம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 371-ஆவது பிரிவையும் மத்திய பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும். அந்தச் சட்டப் பிரிவு, வடகிழக்கு மாநிலங்களில் வெளிமாநிலத்தில் நிலம் வாங்குவதற்குத் தடையாக இருக்கிறது. 371-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்தால், அதை வரவேற்பேன். ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக 370-ஆவது பிரிவை ரத்து செய்த மத்திய பாஜக அரசு, அரசமைப்புச் சட்டத்தின் 371-ஆவது பிரிவை ரத்து செய்யாது.

மகாராஷ்டிரத்தில் வேலையின்மை பிரச்னை நிலவுவதற்கு ஆளும் பாஜக அரசின் தவறான கொள்கைகளே காரணம். தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் என்னைப் பற்றி அதிகம் பேசுவதற்குப் பதிலாக சமானியா்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகள், வேலையின்மை, விவசாயிகள் பிரச்னை ஆகியவை குறித்து பாஜக தலைவா்கள் பேச வேண்டும் என்றாா் சரத் பவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com