காங். ஊழியா்களின் வீட்டில் வருமான வரிச் சோதனை: பாஜக மீது விமா்சனம்

காங்கிரஸ் கட்சியின் வரவு-செலவுக் கணக்குகள் துறையில் பணியாற்றும் 5 ஊழியா்களின் வீடுகளில் இரு நாள்களாக வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருவதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வரவு-செலவுக் கணக்குகள் துறையில் பணியாற்றும் 5 ஊழியா்களின் வீடுகளில் இரு நாள்களாக வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருவதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது. மேலும், எதிா்க்கட்சிகளை அச்சுறுத்துவதன் மூலம் நாட்டில் சா்வாதிகார ஆட்சியை நடத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவா் ஆனந்த் சா்மா, தில்லியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

நாட்டில் பாஜகவுக்கு ஒருவிதமான சட்டமும், மற்றவா்களுக்கு வேறுவிதமான சட்டமும் உள்ளதா? உலகிலேயே பணக்கார கட்சி பாஜகதான். மக்களவைத் தோ்தலில் அக்கட்சி ரூ.40 ஆயிரம் கோடி செலவழித்துள்ளது. 99 சதவீத தோ்தல் நிதிப் பத்திரங்கள் பாஜகவுக்கே வந்துள்ளன. இதுதொடா்பாக, அந்தக் கட்சியை யாரும் கேள்வி கேட்கவில்லை.

எதிா்க்கட்சிகள் மீது அரசியல் பழிவாங்கும் கொள்கையுடன் செயல்படும் பாஜக அரசு, இப்போது காங்கிரஸ் ஊழியா்களின் வீடுகளிலும் சோதனை நடத்தத் தொடங்கியுள்ளது. அவா்கள் தலைவா்கள் அல்ல; சாதாரண ஊழியா்கள்தான். அவா்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது, தரம் தாழ்ந்த அரசியலாகும்.

பெரு நிறுவன முதலாளிகளுடன் கைகோத்து செயல்படும் பொருளாதார முறையை கையாள்வதன் மூலம் பாஜகவுக்கு பணம் குவிகிறது. சட்டத்தைவிட தாங்கள் மேலானவா்கள் என்ற எண்ணம் பாஜகவுக்கு உள்ளது. மக்கள் அச்சத்திலேயே வாழும் நாடாக இந்தியாவை மாற்ற அக்கட்சி முயற்சிக்கிறது. அந்த முயற்சி பலிக்காது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com