மற்றுமொரு சிறப்பான இன்னிங்ஸுக்காக காத்திருக்கிறோம்: கங்குலிக்கு மம்தா வாழ்த்து 

மற்றுமொரு சிறப்பான இன்னிங்ஸுக்காக காத்திருக்கிறோம் என்று பிசிசிஐ தலைவராகத் தேர்வாகவுள்ள செளரவ் கங்குலிக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செளரவ் கங்குலி - மம்தா பானர்ஜி
செளரவ் கங்குலி - மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மற்றுமொரு சிறப்பான இன்னிங்ஸுக்காக காத்திருக்கிறோம் என்று பிசிசிஐ தலைவராகத் தேர்வாகவுள்ள செளரவ் கங்குலிக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி போட்டியிடவுள்ளார். எனினும் கடந்த ஐந்து வருடங்களாக கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி உள்ளதால் பிசிசிஐ தலைவராக 10 மாதங்கள் மட்டுமே அவர் பதவி வகிக்க முடியும்.

மாற்றப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி பிசிசிஐ நிர்வாகப் பதவியில் ஆறு வருடங்கள் பதவி வகித்த பிறகு, மூன்று வருடங்கள் கழித்தே பிசிசிஐ நிர்வாகப் பதவியில் ஒருவர் மீண்டும் போட்டியிடமுடியும். 

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு திங்களன்று  வேட்புமனு தாக்கல் செய்தார் செளரவ் கங்குலி. தலைவர் பதவிக்கு கங்குலி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் அக்டோபர் 23 அன்று பிசிசிஐ தலைவராக கங்குலியின் பெயர் அறிவிக்கப்படும்.

இதுதொடர்பாக ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, 'கங்குலியை பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்துள்ளோம். அக்டோபர் 23 அன்று முடிவுகள் வெளிவரும்' என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் மற்றுமொரு சிறப்பான இன்னிங்ஸுக்காக காத்திருக்கிறோம் என்று பிசிசிஐ தலைவராகத் தேர்வாகவுள்ள செளரவ் கங்குலிக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பிசிசிஐ தலைவராக ஒருமனதாகத் தேந்தெடுக்கப்பட்டுள்ளதற்காக செளரவ் கங்குலிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது பணிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். நீங்கள் இந்தியாவுக்கும் மேற்கு வங்கத்துக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உங்களது பணிக்காலத்தில் எங்களுக்கு பெருமை சேர்த்துளீர்கள். மற்றுமொரு சிறப்பான இன்னிங்ஸுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com