'பப்ஜி' கேம் விளையாட மறுத்ததால் கடத்தப்பட்டதாகக் கூறி பெற்றோரையே மிரட்டிய சிறுவன்!

ஹைதராபாத்தில் 'பப்ஜி' கேம் விளையாட அனுமதி மறுக்கப்பட்டதால் 16 வயது சிறுவன் வீட்டை விட்டு வெளியேறியதோடு மட்டுமின்றி, தான் கடத்தப்பட்டதாக பெற்றோரையே மிரட்டியுள்ளார். 
'பப்ஜி' கேம் விளையாட மறுத்ததால் கடத்தப்பட்டதாகக் கூறி பெற்றோரையே மிரட்டிய சிறுவன்!

ஹைதராபாத்தில் 'பப்ஜி' கேம் விளையாட அனுமதி மறுக்கப்பட்டதால் 16 வயது சிறுவன் வீட்டை விட்டு வெளியேறியதோடு மட்டுமின்றி, தான் கடத்தப்பட்டதாக பெற்றோரையே மிரட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், ஐஐடியில் சேர்வதற்காக பயிற்சி பெற்று வந்துள்ளான். கடந்த 4 மாதங்களாக பயிற்சியில் குறைவான மதிப்பெண்கள் பெற்று வந்துள்ளான். இதன்பின்னர் அவனது பெற்றோர்கள் கவனித்தபோது 'பப்ஜி' கேமில் சிறுவன் தீவிரமாக விளையாடியது தெரிய வந்துள்ளது. 

தொடர்ந்து, பெற்றோர்கள் சிறுவனை கண்டித்து அவனிடம்  இருந்து போனை பறித்துள்ளனர். அந்தக் கோபத்தில் சிறுவன் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். மேலும், வீட்டில் இருந்து சிறிது பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளான். அந்தப் பணத்திற்கு மொபைல் போன் ஒன்றை வாங்கி, அதில் இருந்து தனது பெற்றோரை அழைத்து, வேறு ஒரு குரலில் பேசி, 'உங்களது மகன் கடத்தப்பட்டுள்ளான். உடனடியாக ரூ.3 லட்சம் பணம் வேண்டும்' என்று பேசியுள்ளான். தொடர்ந்து வெவ்வேறு எண்களில் இருந்து பெற்றோரிடம் வேறு குரலில் பேசியுள்ளான்.

பின்னர், சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, சிறுவன் தனது தாத்தாவின் வீட்டுக்குச் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளான். அப்போது, டிக்கெட் முன்பதிவு செய்த குறுந்தகவல் சிறுவனின் அம்மாவின் செல்போனுக்குச் சென்றது. இதுகுறித்து சிறுவனின் தாயார் காவல்துறையில் புகார் தெரிவிக்க, சரியாக பேருந்து புறப்படும் நேரத்தில் சிறுவனைப் பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

இதன்பின்னரே சிறுவன்தான் தங்களுக்கு போன் செய்து மிரட்டி பணம் கேட்டுள்ளது பெற்றோருக்கு தெரிய வந்து அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com